கேரளா காங்கிரஸ் தலைவரான கே எம் மணி இன்று காலமானார். இவருக்கு வயது 86. ஒரே தொகுதியில் 12 முறை வென்ற மகத்தான சாதனைக்கு சொந்தக்காரர் இவர்.
கே எம் மணி, கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். கரிங்கோழக்கல் மானி மானி என்பது தான் இவருடைய முழு பெயர். மற்றொரு காங்கிரஸ் தலைவரான பி.சி.சாக்கோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கேரள காங்கிரஸ் (எம்) என்ற தனி அமைப்பில் இயங்கினார்.
1965ம் ஆண்டு முதன் முதலாக கோட்டயம் மாவட்டம் பாலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர் 1967ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் துவங்கி 2016ம் ஆண்டு வரை, அதே பாலா தொகுதியில் 12 முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளார். கேரளாவில் அதிக ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்கிற பெருமை கே.எம்.மானிக்கு உண்டு.
காங்கிரஸ் கட்சி, இடதுசாரி இரு பெரிய கட்சிகளுடனும் இவரது கேரள காங்கிரஸ் (மானி) கூட்டணி அமைத்து தேர்தல்களைச் சந்தித்து உள்ளது. கடந்த சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு 6 எம்.எல்.ஏ.க்களைப் பெற்றனர். ஒரே தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்ட போதிலும், ஒரு முறை கூட தோல்வியைச் சந்திக்காத சரித்திரம் கே.எம்.மானியை சேரும். அடித்தட்டு மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனில் அதிக அக்கறை கொண்டு செயல்பட்டவராக கே.எம்.மானியை கேரள மக்கள் பார்க்கிறார்கள்.
கேரள முன்னாள் நிதி அமைச்சரான இவர், கேரள சட்ட மன்றத்தில் 13 முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்து இருக்கிறார். கேரள லாட்டரி உதவித் திட்டம் மூலமாக 1,400 கோடியைத் திரட்டி அதன் மூலமாக ஒன்றரை லட்சம் ஏழை நோயாளிகளுக்கு உதவிகள் கிடைக்கச் செய்தார். உலகிலேயே முதல் முறையாக விவசாயிகள் மற்றும் விதவைகளுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம் இவர் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் கேரள அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மணி, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகலில் இறந்தார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.