இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்தின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 2-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.
சுனில் அரோரா பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1956ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி, பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் பிறந்தார். இவரது தந்தை இந்தியன் ரயில்வேயில் கணக்காளராக இருந்து ஓய்வு பெற்றவர். 1980 ஐஏஎஸ் பேட்சை சேர்ந்த சுனில், முதன் முதலாக ராஜஸ்தானில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார்.
ராஜஸ்தானில் தோல்பூர், ஆல்வார், நகவுர், ஜோத்பூர் மாவட்டங்களில் ஆட்சியாளராக செயல்பட்ட அரோரா, 1993 முதல் 1998ம் ஆண்டு வரை முதலமைச்சரின் செயலாளராகவும் பதவி வகித்தார்.
அதேபோல், தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை, நிதித்துறை, ஜவுளித்துறை மற்றும் திட்டக் கமிஷனில் பணியாற்றியுள்ளார். இந்தியன் ஏர்லைன்ஸில் நிர்வாக இயக்குனராகவும் 5 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.
இதைத்தொடர்ந்து, பதவி உயர்வு பெற்று 2005 முதல் 2008ஆம் ஆண்டு வரை முதலமைச்சரின் முக்கிய செயலாளராக பதவி வகித்தார்.
பொது ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதிக்கு (Prasar Bharti) ஆலோசகராகவும், பெரு நிறுவன விவகாரங்களுக்கான மையத்தின் தலைமை செயலதிகாரி மற்றும் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.
2017, ஆகஸ்ட் 31ம் தேதி, இந்தியாவின் இரு தேர்தல் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தற்போது தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சுனில் அரோரா, டிசம்பர் 2ம் தேதி பதவியேற்க உள்ளார்.
ஐஏஎஸ் முடிப்பதற்கு முன்பு, பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள DAV கல்லூரியில் இணை பேராசிரியராகவும் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.