கொச்சி விமான நிலையம் இன்றிலிருந்து இயங்குகிறது. கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத மழைப்பொழிவின் காரணமாக பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. சாலைகள், மின் இணைப்பு, ரயில் மற்றும் விமான சேவைகள் என அனைத்தும் பெரிய அளவில் சேதாரமாகின.
இந்த பேரிடருக்கு சுமார் 300க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மழை வெள்ளம் வடிந்து கொஞ்சம் கொஞ்சமாக கேரளம் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதனைத் தொடர்ந்து, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் தங்களின் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனர்.
மீண்டும் செயல்படத் துவங்கும் கொச்சி விமான நிலையம்
அவர்களுக்குத் தேவையான நிதி உதவி மற்றும் உணவுப் பொருட்களை தரவும் ஏற்பாடு செய்தது அம்மாநில அரசு. இந்த மழைப்பொழிவின் காரணமாக கொச்சியில் செயல்பட்டு வந்த சர்வதேச விமான நிலையம், தன்னுடைய சேவையை ஆகஸ்ட் 14ம் தேதி முடக்கியது.
விமான ஓடுதளம் முழுவதும் வெள்ள நீர் புகுந்ததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டது கேரளா. இந்த மழை வெள்ளத்தினால் 220 கோடி ரூபாய் அளவில் கொச்சி விமான நிலையம் சேதம் அடைந்துள்ளது.
கொச்சி விமான நிலையம்
விமான நிலையத்தில் தேங்கிய நீரினை அகற்ற 300 முதல் 400 வேலையாட்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். மேலும் அதற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெள்ள நீர் வடிந்தவுடன் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் 26ம் தேதியே கொச்சி விமான நிலையத்தை திறக்க திட்டமிட்டனர் அதிகாரிகள். ஆனால் போதுமான அளவிற்கு மேன்பவர் இல்லாத காரணத்தால் இன்று மதியம் 2 மணி அளவில் மீண்டும் செயல்பாட்டிற்கு வருகிறது கொச்சி சர்வதேச விமான நிலையம்.