சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்காக மேகாலயா சி.பி.ஐ அலுவலகத்தில் ஆஜரானார் ராஜீவ் குமார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சில ஆவணங்கள் மாயமானது தொடர்பாக, கொல்கத்தா ஆணையர் ராஜீவ்குமாரை விசாரிக்க செய்ய சிபிஐ கொல்கத்தா சென்றது. இதனை எதிர்த்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகளை வலுக்கட்டாயமாக காரில் ஏத்தி காவல் நிலையம் இழுத்துச் சென்றது கொல்கத்தா போலீஸ்.
ராஜீவ் குமார் ஆஜர்
எனவே கொல்கத்தா முதல்வர் மற்றும் போலீசார், சட்டத்தை பின்பற்ற இடையூறாக இருப்பதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்க ராஜீவ்குமாருக்கு உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜீவ்குமாரை சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் அவரை கைது செய்யக் கூடாது என்றும் சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் சிபிஐ இன்று விசாரணை நடத்துகிறது. இதற்காக இன்று காலை மேகாலயா சிபிஐ அலுவலகத்தில் ஆஜர் ஆனார் ராஜீவ். சாரதா நிதி நிறுவன வழக்கில் மாயமான ஆவணங்கள் குறித்தும், இதில் தொடர்புடையவர்கள் குறித்தும் ராஜீவ்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.