மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் சஞ்சய் ராய் என்ற நபரை கைது செய்தனர்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Kolkata Doctor Rape-Murder Case Live Updates: As talks with CM Mamata fail, doctors write to President Murmu, PM Modi seeking intervention
இதனைத் தொடர்ந்து கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதனிடையே பயிற்சி பெண் மருத்துவர் கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டும், 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் ஜூனியர் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடிதம்
இந்நிலையில், கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிடக் கோரி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும், நான்கு பக்கங்கள் கொண்ட கடிதத்தின் நகல்கள் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தங்கர் மற்றும் மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி நட்டா ஆகியோருக்கும் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேற்கு வங்க பயிற்சி மருத்துவர்கள் முன்னணி என்ற சங்கத்தின் சார்பில் எழுதப்பட்டுள்ள கடிதத்தில், “ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பயிற்சி மருத்துவர் மிகவும் இழிவான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி வழங்கப்பட வேண்டும். அப்போதுதான், மேற்கு வங்க சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றும் சுகாதாரப் பணியாளர்களாகிய நாங்கள், அச்சமின்றி பொதுமக்களுக்கு எங்களது கடமைகளை ஆற்ற முடியும். இந்த கடினமான காலத்தில், உங்கள் தலையீடு எங்கள் அனைவருக்கும் கலங்கரை விளக்கமாக செயல்படும். எங்களைச் சுற்றியுள்ள இருளில் இருந்து வெளியேறுவதற்கான வழியைக் காட்டும்" என்று கூறியுள்ளனர்.
இந்தக் கடிதம், இந்த மாதத்தின் தொடக்கத்தில் தயாரிக்கப்பட்டதாகவும் நேற்று (வியாழக்கிழமை) அனுப்பப்பட்டதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களில் ஒருவரான அனிகேத் மஹதோ தெரிவித்துள்ளார். மேலும், குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா ஆகியோருக்கும் இந்தக் கடிதத்தின் நகல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நிவாரணம் அறிவிப்பு
இதற்கிடையில், ஜூனியர் மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, தகுந்த நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் 29 நோயாளிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த 29 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' தள பக்கத்தில், "ஜூனியர் டாக்டர்களின் வேலைநிறுத்தம் காரணமாக சுகாதார சேவைகளில் ஏற்பட்ட இடையூறால் விலைமதிப்பற்ற 29 உயிர்களை நாம் இழந்திருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ரூ.2 லட்சம் நிதி நிவாரணமாக வழங்கப்படும்" என்று முதலவர் மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, போராட்டம் நடத்தி வரும் பயிற்சி மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்த நிலையில், நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்படாததால் பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர். இதனால், முதல்வர் மம்தா பானர்ஜி 2 மணி நேரம் காத்திருந்தார். மக்கள் நலனுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.