மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கடந்த 9 ஆம் தேதி முதுகலை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவில் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Under fire over RG Kar incident, Mamata to PM: Bring central law for 15-day trial, exemplary punishment in rape cases
இது தொடர்பாக அவர் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது;-
"மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, நாடு முழுவதும் பாலியல் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். மேலும் பல வழக்குகளில் கொலையுடன் கூடிய பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுகின்றன.
நமக்கு கிடைத்துள்ள தரவுகளின்படி, நாட்டில் தினந்தோறும் சுமார் 90 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகிறது என்பது அச்சமூட்டுகிறது. இது சமூகம் மற்றும் தேசத்தின் நம்பிக்கையையும், மனசாட்சியையும் உலுக்குகிறது. பெண்கள் பாதுகாப்பாக உணரும் வகையில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நம் அனைவரின் கடமையாகும்.
இத்தகைய கொடூரமான குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராக முன்மாதிரியான தண்டனையை பரிந்துரைக்கும் கடுமையான சட்டங்களை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளை விரைவாக விசாரிக்க விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட வேண்டும். இதுபோன்ற வழக்குகளில் விசாரணையை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்."
இவ்வாறு மம்தா பானர்ஜி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“