Advertisment

கொல்கத்தா மருத்துவர் வன்கொடுமை எதிரொலி: நோயாளிகளின் வருகை பாதிக்கும் மேல் சரிவு

கடந்த திங்களன்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசிய பயிற்சி மருத்துவர்கள், தங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தனர். எனினும், தாங்கள் இயக்கமாக பணியாற்றுவோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kolkata doctors

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர்.ஜி. கர் மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், நீதி கேட்டு சக மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மாநில அரசுக்கு எதிராக நடந்த இப்போராட்டத்தின் எதிரொலியாக, மருத்துவனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை பாதிக்கும் மேலாக குறைந்தது. குறிப்பாக, மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வந்த முக்கிய அறுவை சிகிச்சைகள், சுமார் 91 சதவீதம் வரை குறைந்ததாக, ஜூலை முதல் அக்டோபர் வரையிலான தரவுகள் தெரிவிக்கின்றன.

Advertisment

 

ஆங்கிலத்தில் படிக்கவும்: Kolkata rape murder: Three months into protests at RG Kar, patient count down by half

கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ஆம் தேதி, கொல்கத்தாவின் ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் நான்காம் தளத்தில் இருந்த அரங்கில் இருந்து, பெண் பயிற்சி மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவத்திற்கு நீதி கேட்டு சக மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கினர். குறிப்பாக, மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும், காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையின் உயரதிகாரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த திங்களன்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசிய பயிற்சி மருத்துவர்கள், தங்கள் போராட்டத்தை திரும்பற்றுக் கொள்வதாக அறிவித்தனர். எனினும், தாங்கள் இயக்கமாக பணியாற்றுவோம் என அவர்கள் கூறியுள்ளனர்.

மாநில அரசைக் கண்டித்து மருத்துவர்கள் நடத்திய போராட்டம், ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்கு வருகை தரும் நோயாளிகளின் எண்ணிக்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

கிடைக்கப்பெற்ற தரவுகளின் படி, கடந்த ஜூலை மாதம் மட்டும் புறநோயாளிகளாக நாளொன்றுக்கு 5 ஆயிரத்து 106 நோயாளிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளனர். இதேபோல், 256 நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் கடும் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி, 2 ஆயிரத்து 362 புறநோயாளிகளும், 122 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக, ஆகஸ்ட் மாதத்தில் 2 ஆயிரத்து 44 புறநோயாளிகள் மட்டுமே சிகிச்சைக்காக வந்துள்ளனர்.

மருத்துவமனை நிர்வாகத்தின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 1 முதல் 8-ஆம் தேதிவரை சுமார் 23 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனர். குறிப்பாக, நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 875 நோயாளிகள் வருகை தந்தனர். ஆகஸ்ட் 9-ஆம் தேதி பெண் மருத்துவரின் உயிரிழப்பு சம்பவத்திற்கு பின்னர், புறநோயாளிகளின் வரவு ஏறத்தாழ 100-க்கும் குறைவானதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 14-15 ஆகிய தேதிகளில் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, புறநோயாளிகள் ஒருவர் கூட வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 22-ஆம் தேதி முதல் மருத்துவமனையின் புதிய முதல்வராக மனாஸ் பன்ந்தோபதாய் பதவியேற்ற பின்னர், அந்த மாதத்தின் இறுதிவரை நாளொன்றுக்கு சராசரியாக 900 நோயாளிகள் சிகிச்சைக்காக வந்துள்ளனர்.

இது குறித்து அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு அளித்த தகவலின் படி, தற்போது நோயாளிகளின் வருகை சீராக உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார். அக்டோபர் 18-ஆம் தேதிவரை நாளொன்றுக்கு 3 ஆயிரத்து 995 நோயாளிகள் வருகை தருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஆகஸ்ட் மாதம் இறுதி முதல் மருத்துவமனையில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதால் நோயாளிகளின் வருகை அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், மருத்துவமனைக்கு முன்னர் இருந்தது போல் நோயாளிகளின் வருகை அதிகரிக்க இன்னும் பல காலம் ஆகும் என சுகாதாரத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவோர் மற்றும் அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கையை பார்த்தால் இதனை புரிந்து கொள்ளலாமென அவர்கள் கூறுகின்றனர். இளநிலை மருத்துவர்கள் பணிக்கு திரும்பியிருந்த போதிலும், ஆகஸ்ட் 14-ஆம் தேதி மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆர்.ஜி. கர் மருத்துவமனையில் சுமார் 700 இளநிலை மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக, இளநிலை மருத்துவர்கள் தான் மருத்துவமனையின் முதுகெலும்பாக பங்காற்றியதாகவும், நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் அவர்களின் பங்கு இன்றியமையாதது எனவும், அவசர சிகிச்சை பிரிவு அதிகாரி தபாஸ் தெரிவித்துள்ளார்.

மூத்த மருத்துவர்கள் அதிக நேரம் பணியாற்றினாலும் கூட, நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் அறுவை சிகிச்சைகளில் பெரிய அளவில் தாக்கம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, ஆர்.ஜி. கர் மருத்துவமனை ஆய்வகங்களில் ஜூலை மாதத்தில் மட்டும் நாளொன்றுக்கு சராசரியாக 2 ஆயிரத்து 467 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை, ஆகஸ்ட் மாதத்தில் 928-ஆக குறைந்துள்ளது. இதேபோல் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இவை 518 மற்றும் 417 என சரிவை சந்தித்துள்ளது.

இதேபோல், அக்டோபர் 9-ஆம் தேதிக்கு முன்னர் வரை நாளொன்றுக்கு சராசரியாக 48 முக்கிய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கடுத்த மாதங்களில் இவை 7-ஆக குறைந்தது.

மருத்துவரின் படுகொலை மற்றும் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர், தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் தொடர்ச்சியாக, மருத்துமனையின் செயல்பாடுகள் தற்போது மீண்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். குற்றம் நடந்த பகுதியை தவிர மற்ற இடங்களை மறுசீரமைக்கும் பணிக்காக சிபிஐ மற்றும் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது. மேலும், 95 சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், ஓய்வு அறை மற்றும் கழிப்பறை உள்ளிட்டவை உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் படி பராமரிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவசர சிகிச்சை பிரிவு கட்டடம் சீரமைப்புக்காக, அது மீது தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்து நிதி பெறுவது குறித்து பரீசிலிக்கப்படுவதாகவும், மொத்த சீரமைப்புக்கு தேவைப்படும் தொகை குறித்து கணக்கிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். விபத்தில் படுகாயமடைந்த அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள ஆகஸ்ட் 11-ஆம் தேதி நாள் குறிக்கப்பட்டதாகவும், ஆனால், இச்சம்பவத்திற்கு பின்னர் தங்களால் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுவது சிரமமாக இருந்ததாகவும் கூறியுள்ளார். தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவளித்து சிகிச்சை பெற முடியாததால், காத்திருந்து இதே மருத்துவமனையில் கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவர்கள் நல்ல விதமாக ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment