இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில், குல்பூஷன் யாதவின் மனைவி தனது கணவரை சந்திக்க பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து, இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், மார்ச் 2016 முதல் பாகிஸ்தானின் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குல்பூஷன் யாதவுக்கு, தனது மனைவியை சந்திக்க அனுமதி கொடுத்திருப்பது மனோரீதியாக வலிமையைத் தரும் என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று அஹமதாபாத் வந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து கூறுகையில், "குல்பூஷன் யாதவை சிறையில் இருந்து விடுவித்து, மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் இந்தியா தன்னால் இயன்றதை செய்து வருகிறது. இதற்கிடையில், குல்பூஷனின் மனைவி அவரை சந்திக்க இருப்பது, சிறையில் வாடும் குல்பூஷனுக்கு நிச்சயம் மனோரீதியாக வலிமை தரும். அவரை இந்தியா கொண்டுவருவதற்கு மீதமுள்ள சில நடைமுறை சிக்கல்கள் விரைவில் களையப்படும்" என்றார்.
முன்னதாக, குல்பூஷனின் மனைவியை அவரை பார்க்க அனுமதித்த பாகிஸ்தான் அரசு இதுகுறித்து அளித்த விளக்கத்தில், "மனிதாபிமான அடிப்படையில்" இந்த சந்திப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றது.
கடந்த ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி குல்பூஷனுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இதுவரை குல்பூஷன் யாதவின் மனைவி குறித்த எந்த விவரமும் வெளியிடப்படாமல் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.