உன்னாவ் எம்.எல்.ஏ. விவகாரத்தில், காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கிடையே பெரும் கருத்துமோதலே வெடித்துள்ளது.
உன்னாவ் பாலியல் பலாத்கார புகாரில் சி்ககிய பா.ஜ. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்காரை, கட்சியை விட்டு இப்போதுதான் நீக்குகிறீர்களா என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேட்டதற்கு, அவரை நாங்கள் எப்போதே கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துவிட்டோம். தற்போது அவரை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கியுள்ளதாக உத்திரபிரேதேச பா.ஜ., தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் கட்சியான பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் தன்னிடம் வேலை கேட்டு வந்த 17வயது பெண்ணை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக புகார் அளித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் விசாரணையின் போது மர்மமான முறையில் உயிரிழந்தார். முன்னதாக எம்எல்ஏவின் ஆதரவாளர்களால் கடுமையாக தாக்கப்பட்டு இருந்தார். இதையடுத்து இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், தனக்கு நீதி வேண்டும் என்று கோரி உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் அலுவலகம் முன்பு தற்கொலைக்கு முயற்சித்தார்.
சிறையில் எம்.எல்.ஏ : பிரச்னை பூதாகரமானதால் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக குல்தீப் சிங் சிறையில் இருக்கிறார்.
கார்விபத்து : இந்தநிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, பாதிக்கபட்ட பெண், உறவு பெண்கள் மற்றும் வக்கீல் உடன் பயணித்த கார் மீது அதிவேகமாக வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பயணித்த அவரின் இரண்டு பெண் உறவினர்களும் உயிரிழந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் வக்கீல் ஆகியோர் கடுமையான காயங்களுடன் லக்னோவில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மிரட்டல் : இந்நிலையில் பாஜக எம்எல்ஏ குல்தீப்பின் ஏவின் சகோதர் மனோஜ் சிங் மற்றும் அவரது மனைவி சாசி ஷிங் மற்றும் அவரது மகன் ஆகியோர் புகாரை வாபஸ் வாங்காவிட்டால் கொன்றுவிடுவோம் என உன்னாவ் பெண் குடும்பத்தினரை முன்பே மிரட்டி உள்ள தகவல் வெளியாகியுள்ளது.
தலைமை நீதிபதிக்கு கடிதம் : இந்த அச்சுறுத்தல் தொடர்பாக பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் அம்மா, அத்தை ஆகியோர் கடந்த ஜூலை 12ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கடிதம் எழுதியுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் எதிரொலி : இந்த விபத்து, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் நாடாளுமனறத்தில் இப்பிரச்சனையை எழுப்பி ஸ்தம்பிக்க வைத்தன.