கர்நாடக முதல்வராக வரும் திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு குமாரசாமி பதவி ஏற்க உள்ளார்.
நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு 104 இடங்கள் கிடைத்தது. தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதும், பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேசமயம், 221 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 78 இடங்களை மட்டுமே கைப்பற்ற, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. ‘நாம் ஜெயிக்கவில்லை என்றாலும் பரவாயில்ல.. பாஜக கையில் ஆட்சி சென்றுவிடக் கூடாது’ என்று நினைத்த காங்கிரஸ், தேர்தலுக்கு முன்பு கூட்டணி வைக்காத மஜத கட்சியுடன், தேர்தலுக்கு பிறகு கூட்டணி வைத்தது. குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது காங்கிரஸ்.
இதை முற்றிலும் எதிர்த்த பாஜக, ‘மக்கள் எங்களை தான் பெரும்பாலான இடங்களில் வெற்றிப்பெற வைத்தனர். எனவே, எங்களை தான் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என உரிமை கோரியது. ஆனால், 16ம் தேதி இரவு, கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா, பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார். அதுமட்டுமின்றி, 15 நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றார்.
பதறிய காங்கிரஸ், ஆளுநர் அறிவிப்புக்கு தடை கோரி, அன்று இரவே உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்து, அதை அவசரமாக விசாரிக்க கோரியது. விடிய விடிய நடந்த விசாரணையின் முடிவில், ஆளுநரின் முடிவில் தலையிடவோ, விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பவோ முடியாது. எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை என உத்தரவிட்டது.
இதையடுத்து, மே 17ம் தேதி காலை கர்நாடகாவின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்றார். பதவியேற்றவுடன் கர்நாடக மாநிலத்தில் ரூ.1 லட்சம் வரை விவசாய கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடிக்கான ஆணையில் தனது முதல் கையெழுத்தையிட்டார் எடியூரப்பா. ஆனால், இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான அளவு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கிடைக்காததால், தனது பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து ராஜ் பவனுக்கு சென்ற எடியூரப்பா, கவர்னர் வஜுபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்தார்.
இந்நிலையில், கர்நாடக முதல்வராக வரும் திங்கட்கிழமை பகல் 12 மணிக்கு குமாரசாமி பதவி ஏற்க உள்ளார், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு, எதிர்க்கட்சி தலைவர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ்,சரத்பவார், சந்திரசேகர் ராவ், சந்திரபாபு ,நாயுடு, அஜித்சிங் மற்றும் தேசிய அளவிலான முக்கிய எதிர்கட்சித் தலைவர்களை அழைக்க கர்நாடக காங்கிரஸ்- மஜத முடிவெடுத்துள்ளது.
இதனை மமதா பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். பதவியேற்பு விழாவிற்கு என்னை அழைத்துள்ளார்கள் என ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.