2018ம் ஆண்டின் கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் யாரும் எதிர்பாராத வகையில் அரசியலில் திடீர் திருப்பங்களை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவில் பாஜக வெற்றி பெற்றது என்று கூறப்பட்டு வந்த நிலையில், மஜத-வுடன் திடீர் கூட்டணியில் இணைந்தது கங்கிரஸ். இதனால் பாஜக ஆட்சியமைக்க வேண்டுமென்றால் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற சூழல் நிலவியது. இருப்பினும் கர்நாடக ஆளுநர் வாஜுபாய் வாலா, பாஜக-வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவையே ஆட்சியமைக்க அழைத்தார். மேலும் 15 நாட்களுக்குள் எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் ஏற்கனவே ஏற்பட்ட திருப்பங்களை காட்டிலும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது எடியூரப்பாவின் ராஜினாமா.
தனது பெரும்பான்மையை நிரூபிக்க இயலவில்லை அதனால் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக எடியூரப்பா தெரிவித்தார். 2 நாட்களே பதவியில் நீடித்த அவர், உருக்கமான உரையுடன் தனது ராஜினாமா செய்தியை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பெரும்பான்மை உடையக் குமாரசாமி முதல்வர் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வுகளை அடுத்து, கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்ட குமாரசாமி இன்று பதவியேற்கிறார். கர்நாடக சட்டப்பேரவை அமைந்துள்ள விதான் சவுதாவுக்கு வெளியே மாலை 4.30மணிக்கு நடைபெறும் விழாவில் ஆளுநர் வஜூபாய் வாலா, குமாரசாமிக்கு பதவிபிரமாணம் செய்து வைக்கிறார்.
இந்த விழாவில் பங்கேற்க இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவரது தாய் சோனியா காந்தி, பாஜக ஆளாத மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர் ராவ், பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும் மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதலில் இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது தூத்துக்குடி கலவரத்தில் நிகழ்ந்த 11 பேர் மரணத்தின் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பங்குபெறுவதை தவிர்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று நிகழவிருக்கும் இந்தப் பதவி பிரமாணம் நிகழ்ச்சிக்காகக் கட்-அவுட் மற்றும் பேனர்களை வைக்க வேண்டாம் எனவும், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு தனது தொண்டர்கள் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று நம்புவதாகவும் குமாரசாமி தெரிவித்துள்ளார். மேலும் பட்டாசுகள் வெடிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.