கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்னரே பாஜக-வை சேர்ந்த எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். வெறும் 2 நாட்களே முதல்வர் பதவியில் இருந்த எடியூரப்பா உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தனது பெரும்பான்மையை நிரூபிக்க இயலவில்லை என்றவாறு உருக்கமான உரையை அளித்தார். மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களுக்கு நல்லரசை அளிக்க உறுதியளிப்பதாகவும் கூறினார். இந்த நிகழ்வின் பின்பு, காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் குமாரசாமி ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இந்தச் சந்திப்பின் பிறகு செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, தன்னை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, கர்நாடகாவின் அடுத்த முதல்வராகக் குமாரசாமி மே 23 புதன்கிழமை பகல் 12.30 மணிக்குப் பதவி ஏற்க உள்ளதாக மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தனிஷ் அலி தெரிவித்துள்ளார். முன்னதாக 21ம் தேதி பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அன்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி நினைவு நாள் என்பதால், புதன்கிழமைக்குத் தனது பதியேற்பு நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளதாகக் குமாரசாமி அறிவித்துள்ளார்.
பதவி ஏற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பல தோழமை கட்சிகளுக்கு குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு கட்சி தலைவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.