மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் 6 சிறுத்தைகளின் ரேடியோ காலர் அகற்றப்பட்ட நிலையில், 2 சிறுத்தைகளுக்கு தற்போது கடுமையான தொற்று ஏற்பட்டுள்ளதை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்பட்டதாக, வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள குனோ தேசிய பூங்காவில், நோய் தடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கூண்டுகளுக்கு திரும்பக் கொண்டுவரப்பட்ட ஆறு சிறுத்தைகளில் கடந்த ஜூலை 11 மற்றும் 14 ஆகிய தேதிகளில் 2 சிறுத்தைகள் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தது. இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரேடியோ காலர்களால் சிறுத்தைகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்று தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 2 சிறுத்தை வல்லுநர்கள் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்துள்ளனர்.
மேலும் மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் தலைமை வனவிலங்கு வார்டன் ஜே.எஸ்.சௌஹானும், தான் பதவியில் இருந்து நீக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு, சிறுத்தைகளுக்கு தொற்று ஏற்படுவதாக சந்தேகிப்பதாகக் கூறி, ரேடியோ காலர் சாதனங்களை அகற்றுமாறு பரிந்துரை செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 23) பவக், ஆஷா, தீரா, பவன், கௌரவ் மற்றும் ஷௌர்யா உள்ளிட்ட 6 சிறுத்தைகளின் ரேடியோ காலர்களை அகற்றியதை தொடர்ந்து மருத்துவ நிலைமைகள் குறித்தும் பரிசோதித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த பரிசோதனையில், சில சிறுத்தைகளுக்கு சிறிய காயங்கள் இருந்தன, ஆனால் நமீபிய சகோதரர்களான கௌரவ் மற்றும் ஷௌர்யா ஆகிய சிறுத்தைகளுக்கு கடுமையான தொற்று இருந்தது. அவற்றுக்கான மருந்துகளை நாங்கள் சேகரித்து வைத்துள்ளோம். மேலும் ரேடியோ காலர் பிரச்சனை மீண்டும் வராமல் இருப்பதற்கான வழிகள் குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த சாதனத்தின் வடிவமைப்பில் ஏதேனும் சிக்கல் இருக்கலாம், இது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்த வனவிலங்கு அதிகாரி ஒருவர், சிறுத்தைகள் நோய்த்தொற்றின் வெவ்வேறு நிலைகளில் இருப்பதாகவும், பொதுவாக அவை ஆரோக்கியமாக உள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிறுத்தைகளை கூண்டுக்குள் மாற்றுவதற்காக அவற்றை அமைதிப்படுத்துவதில் சற்று சிரமம் இருந்ததாக தெரிவித்த வனவிலங்கு அதிகாரிகள், தென்னாப்பிரிக்க நிபுணர் மைக் டோஃப்ட் சிறுத்தைகளை அமைதிப்படுத்துவதற்கு பெரிதும் உதவியதாக தெரிவித்தனர். கடந்த செப்டம்பர் மாதம், நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து குனோவுக்கு கொண்டுவரப்பட்ட 20 சிறுத்தைகளில் இதுவரை 8 சிறுத்தைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளன.
கடந்த மார்ச் 27 அன்று, சிறுநீரகக் கோளாறால் சாஷா என்ற நமீபிய சிறுத்தை இறந்தது. ஆனால் குனோ பூங்காவுக்கு வருவதற்கு முன்பே சாஷாவுக்கு பிரச்சினை இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட பெண் சிறுத்தை தக்ஷா, மே 9 அன்று, இனச்சேர்க்கையின் போது இரண்டு ஆண் சிறுத்தைகளுடன் "வன்முறையான தொடர்பு" காரணமாக உயிரிழந்தது.
அதனைத் தொடர்ந்து ஜூலை 11 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தாஜாஸ் மற்றும் சூரஜ் என்ற 2 ஆண் சிறுத்தைகள் உயிரிழந்தது. தாஜாஸ் மற்றும் சூரஜ் ஆகிய 2 சிறுத்தைகளும் ரேடியோ காலர்களால் ஏற்படும் நோய்த்தொற்றுகளால் இறந்ததாகக் கூறப்படும் அறிக்கைகளை "அறிவியல் ரீதியாக" சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் (MoEF&CC) மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“