எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன? - குஷ்பூ

ராகுல் காந்தி - குஷ்பூ சந்திப்பு

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ இன்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பூ, “தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ராகுல் காந்தியுடன் விவாதித்தேன். ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பது காங்கிரஸின் நிலைப்பாடு” என்றார்.

குஷ்பூ அளித்த பேட்டியின் முழு விவரம் பின்வருமாறு,

“ராகுல் ஜி அவர்கள், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை பற்றி கேட்டு அறிந்தார். அ.தி.மு.க. ஆட்சி பற்றி பேசினோம். ஒரு துணை முதலமைச்சர், நேரில் சென்ற பிறகும் அவருக்கு அனுமதி அளிக்கவில்லை. எம்.பி.யை பார்த்ததாக சொல்கிறார்கள். துணை முதலமைச்சரை சந்திப்பதற்கும் எம்.பி.யை சந்திப்பதற்கும் வித்தியாசம் இல்லையா?. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்ற வார்த்தைகளுக்கு ஓ.பி.எஸ் விளக்கம் அளிக்க வேண்டும். அவசரம், முக்கியம் எனும்போது மருத்துவ சிகிச்சைக்கு ராணுவ விமானம் பயன்படுத்தப்படுவதில் தவறு இல்லை. ஆனால் இதே உதவி சாமானிய மக்களுக்கும் கிடைக்குமா? என்பதே எனது கேள்வியாகும்.

காங்கிரசை பொறுத்தவரை ராகுல் தான் பிரதமர் வேட்பாளர். பதவி ஆசைக்காக காங்கிரஸ் கட்சி அரசியல் செய்யவில்லை. ஆனால், பிரதமர் வேட்பாளர் குறித்து நேரம் வரும்போது தான் முடிவு செய்யப்படும். கட்சியை பொறுத்தவரை ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோம்.” என்றார்.

தமிழக தலைவர் திருநாவுக்கரசர் மாற்றப்படுவரா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குஷ்பூ, “ராகுல் ஜி அதனை தான் முடிவு செய்ய வேண்டும். ஒட்டுமொத்த இந்திய அளவிலும் ராகுல் காந்தி தலைமை பொறுப்புக்கு வந்தபிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அவர் கேட்கும் கேள்விகள் எதற்குமே பா.ஜ.க.விடம் நேரடி பதில் இல்லை. 2014-ல் மோடி கூறிய எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அப்போது அவருக்கு இருந்த செல்வாக்கில் பாதி கூட இப்போது இல்லை. அந்த பயம் பா.ஜ.கவினருக்கு ஏற்பட்டுவிட்டது. எனவே தான் ராகுல்காந்தி அறிக்கைக்காகவும் கேள்விக்காகவும் காத்திருந்து அரசியல் செய்கிறார்கள்.” என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close