கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15,16ம் தேதிகளில் இந்திய, சீன ராணுவத்தினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணமடைந்தனர். சீன தரப்பில் 45 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. எல்லை கட்டுப்பாடு கோடு தாண்டி இந்திய எல்லைக்குள் சீன ராணுவத்தினர் ஊடுருவ முயன்றதாலேயே இந்த வன்முறை நிகழ்ந்ததாக மத்திய அரசு கூறி உள்ளது. இதன் காரணமாக லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இரு தரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, எல்லையில் குவிக்கப்பட்ட படைகளை விலக்கிக் கொள்வதாக முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக் பகுதியில் ஆய்வு செய்வதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் லடாக் செல்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், பிரதமர் மோடி (ஜுலை.5) காலை 9.30 மணிக்கு லடாக்கின் லே பகுதிக்கு வந்தடைந்தார். அங்கிருந்து விமானத்தில் பறந்தபடி, எல்லையில் உள்ள நிலைமை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, அங்குள்ள ராணுவ வீரர்களுடன் உரையாற்றினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.
வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் எதிரிகள் அனைவரும் உங்களின் வேகத்தையும், சீற்றத்தையும் பார்த்துவிட்டார்கள். ஒரு நாடு தனது எல்லையை விரிவுபடுத்தும் காலம் எல்லாம் முடிந்துவிட்டது. இது வளர்ச்சி, மேம்பாட்டுக்கான காலம். தனது எல்லையை விரிவாக்கம் செய்ய நினைக்கும் நாடுகள், அவற்றின் படைகள் தோல்வி அடைந்திருக்கிறார்கள் அல்லது திரும்பிச் சென்றிருக்கிறார்கள். இதுதான் வரலாறு உணர்த்தும் பாடம்.
உங்களின் தியாகத்தால் இந்தியாவின் தற்சார்புப் பொருளாதாரம் வலிமையடையும். நான் என் முன் அமர்ந்திருக்கும் பெண் ராணுவ வீரர்களைப் பார்க்கிறேன். எல்லையில் போர்க்களத்தில் அவர்கள் மற்றவர்களுக்கு உத்வேகமாக இருக்கிறார்கள்.
இந்திய வீரர்களின் வீரம், துணிச்சல் அனைத்து இடங்களிலும் பேசப்படும். தேசத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உங்களின் வீரம், துணிச்சல் போற்றப்படும். யார் பலவீனமாக இருக்கிறார்களோ அவர்கள் அமைதிக்கான தொடக்கத்தைக் கொண்டுவர முடியாது. அமைதியைக் கொண்டுவருவதற்கு துணிச்சல் மிகவும் அவசியமானது” என்றார்.
ரூ. 4000 இல்லாததால் அடித்தே கொல்லப்பட்ட நோயாளி ; உ.பி. மருத்துவமனையில் வெறித்தனம்
இந்நிலையில், டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திடீரென சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின்போது, தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் பற்றி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் பிரதமர் மோடி பேசியதாக குடியரசுத்தலைவர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil