Lakhimpur Kheri violence: After 24 hours in detention, Priyanka Gandhi, Deepender Hooda arrested | Indian Express Tamil

எனது கைது சட்ட விரோதமானது; எஃப்.ஐ.ஆர் என்னிடம் காட்டவில்லை: பிரியங்கா காந்தி

Lakhimpur Kheri violence: After 24 hours in detention, Priyanka Gandhi, Deepender Hooda arrested: உத்திரபிரதேசம் லக்கிம்பூர் வன்முறை; பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைது; காங்கிரஸ் கண்டனம்

எனது கைது சட்ட விரோதமானது; எஃப்.ஐ.ஆர் என்னிடம் காட்டவில்லை: பிரியங்கா காந்தி

உள்ளூர் விருந்தினர் மாளிகையில் 24 மணி நேர தடுப்பு காவலுக்குப் பிறகு, சீதாபூர் போலீசார் செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூர்வமாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியையும் குறைந்தது 10 பேரையும் குற்ற தடுப்பு நடவடிக்கைக்காக கைது செய்துள்ளனர்.

லக்கிம்பூர் கேரியில் விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தியப்போது ஏற்பட்ட வன்முறையால் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களைச் சந்திக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சென்றப்போது வழியில் தடுத்து நிறுத்தபட்டார். அங்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகனுக்கு சொந்தமான கார் விவசாயிகளின் மீது மோதியதையடுத்து ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் இறந்துள்ளனர்.

பிரியங்கா காந்தி தவிர, கைது செய்யப்பட்டவர்களில் காங்கிரஸ் தலைவர் தீபேந்தர் சிங் ஹூடா, உத்திர பிரதேச காங்கிரஸ் மாநில தலைவர் அஜய் குமார் லல்லு மற்றும் கட்சியின் எம்எல்சி தீபக் சிங் ஆகியோர் அடங்குவர். இவர்கள் சிஆர்பிசியின் பிரிவு 151 (அறியக்கூடிய குற்றங்களைத் தடுக்க கைது) கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொத்தம் 11 பேர் எங்களால் கைது செய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணியளவில், பிரியங்கா ஜி லக்கிம்பூர் கேரிக்கு செல்லும் வழியில் நிறுத்தப்பட்டார். நிலைமை சரியில்லை மற்றும் பிரிவு 144 சிஆர்பிசி நடைமுறையில் இருப்பதால் நீங்கள் அங்கு செல்லக்கூடாது என்று நாங்கள் அவரிடம் சொன்னோம். அவர் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை, சரியான பாதுகாப்பு முன்னிலையில், நாங்கள் அவரை ஒரு உள்ளூர் விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது, ”என்று ஹர்கான் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) பிரிஜேஷ் குமார் திரிபாதி கூறினார். மேலும் அடுத்தக்கட்ட நடவடிக்கை உயர் அதிகாரிகளால் தீர்மானிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, லக்னோ விஜயத்தில் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடியிடம், வீடியோ அறிக்கை மூலம் பிரியங்கா, லகிம்பூர் சம்பவத்தின் வீடியோவை பார்த்தீர்களா என்று கேட்டார். பின்னர் அவர், ஒரு மஹிந்திரா தார் என்ற கார் சாலையில் நடந்து செல்லும் விவசாயிகள் குழுவின் மீது ஓடுவதைக் காட்டும் வீடியோவைக் காட்டினார்.

இந்த வீடியோ, உங்கள் அமைச்சரின் மகன் தனது வாகனத்தின் கீழ் விவசாயிகளை வெட்டுவதைக் காட்டுகிறது. இந்த வீடியோவை பார்த்து, இந்த அமைச்சரை ஏன் சஸ்பெண்ட் செய்யவில்லை, ஏன் அவரது மகனை இன்னும் கைது செய்யவில்லை என்று நாட்டுக்கு சொல்லுங்கள். என்னைப் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை எஃப்ஐஆரின் உத்தரவின்றி கைது செய்துள்ளீர்கள், இந்த நபர் ஏன் இன்னும் சுதந்திரமாக இருக்கிறார் என்பதை நான் அறிய விரும்புகிறேன், ”என்று பிரியங்கா பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

“இன்று நீங்கள் ‘ஆசாடி கா அமிர்த உத்ஸவ்’ மேடையில் அமர்ந்திருக்கும்போது, ​​விவசாயிகள் நமக்கு சுதந்திரம் கொடுத்தார்கள் என்பதை நினைவில் கொள்ளவும். இன்றும் நமது எல்லைகள் விவசாயிகளின் மகன்களால் பாதுகாக்கப்படுகின்றன. விவசாயிகள் பல மாதங்களாக விரக்தியில் உள்ளனர் மற்றும் குரல் எழுப்புகிறார்கள், ஆனால் நீங்கள் அதை மறுக்கிறீர்கள். லக்கிம்பூருக்கு வந்து அவர்களின் வலியைப் புரிந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். அவர்களுக்குப் பாதுகாப்பை வழங்குவது உங்கள் தர்மம் மற்றும் நீங்கள் உறுதிமொழி எடுத்த அரசியலமைப்பின் தர்மம், ”என்று பிரியங்கா காந்தி கூறினார்.

மேலும் ஒரு அறிக்கையில், பிரியங்கா காந்தி தனது சிறைவாசம் சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டார். நானும் எனது சகாக்களும் கைது செய்யப்பட்டப்போது துன்புறுத்தப்பட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

151 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதாக சிதாபூர், டிசிபி பியூஷ் குமார் சிங்கின் வாய்மொழி அறிக்கையைத் தொடர்ந்து, இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. என்னிடம் எஃப்.ஐ.ஆர் எதுவும் காட்டப்படவில்லை என்று பிரியங்கா கூறினார்.

மேலும் என்னை ஒரு மாஜிஸ்திரேட் அல்லது நீதித்துறை அதிகாரியின் முன் ஆஜர்படுத்தப்படவில்லை என்றும் என்னுடைய சட்ட ஆலோசகரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் பிரியங்கா கூறினார்.

தான் மற்றும் தீபேந்தர் சிங் ஹூடா, உபி காங்கிரஸ் மாநில தலைவர் அஜய் குமார் லல்லு மற்றும் கட்சியின் எம்எல்சி தீபக் சிங் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டது குறித்து, தனக்கு சமூக ஊடகங்கள் மூலம் தான் தெரியும் என்று பிரியங்கா காந்தி கூறினார்.

“சமூக ஊடகங்களில் ஒரு பேப்பரின் ஒரு பகுதியை நானே பார்த்தேன், அதில் அவர்கள் 11 பேர் பெயரிட்டுள்ளனர். அவர்களில் எட்டு பேர் நான் கைது செய்யப்பட்ட நேரத்தில் என் கூட இல்லை. உண்மையில், அக்டோபர் 4 மதியம் லக்னோவிலிருந்து எனது ஆடைகளைக் கொண்டுவந்த இரண்டு நபர்களின் பெயரைக் கூட அவர்கள் கூறியுள்ளனர், ”என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை நடந்த நிகழ்வுகளை விவரிக்கும் போது, “பிரிவு 144 -ன் கீழ் தடைவிதிக்கப்பட்டதாக கூறப்படும் லக்கிம்பூர் கேரியின் எல்லையிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் கைது செய்யப்பட்டேன். எனக்கு கிடைத்த தகவலின் படி சீதாபூரில் 144 தடை விதிக்கப்படவில்லை என்று பிரியங்கா காந்தி கூறினார்.

தீபேந்தர் ஹூடா மற்றும் சந்தீப் சிங் உட்பட நான்கு நபர்களுடன் ஒரே வாகனத்தில் தான் பயணித்ததாக அவர் கூறினார். “என்னுடன் வந்த நான்கு நபர்களைத் தவிர வேறு எந்த பாதுகாப்பு காரும் அல்லது காங்கிரஸ் பணியாளர்களும் என்னுடன் இல்லை,” என்று பிரியங்கா கூறினார்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் தீபேந்தர் சிங் ஹூடா ஒரு ட்வீட்டை வெளியிட்டார், கடந்த 36 மணிநேரமாக நாங்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறோம், அதே நேரத்தில் விவசாயிகள் மீது கார் கொண்டு மோதியவர்கள் சுதந்திரமாக அலைகிறார்கள். “விவசாயிகளை வெட்டுவது இலவசம், நாங்கள் 36 மணி நேரம் போலீஸ் காவலில் இருக்கிறோம். உழவர் குடும்பங்களில் துக்கம் இருக்கிறது, ஆனால் லக்னோவில் உத்ஸவ் (பண்டிகை) கொண்டாடப்படுகிறது. கார் கொண்டு மோதியவர்களுக்கு இந்த நாடு ஆதரவளிக்குமா அல்லது அதனை எதிர்த்து போராடுபவர்களுக்கு ஆதரவளிக்குமா என்று நான் மக்களிடம் கேட்க விரும்புகிறேன், ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்தநிலையில் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கைதுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Lakhimpur kheri violence after 24 hours in detention priyanka gandhi arrested