ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா, தனது தந்தைக்கு தனது சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக வழங்கவுள்ளார். இதற்காக அவர் சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உள்ளாக இருக்கிறார்.
சிங்கப்பூரில் உள்ள ரோகினி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “எனது சிறுநீரகத்தை அப்பாவுக்கு தானமாக வழங்கியதில் நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இம்மாத இறுதியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற வாய்ப்புள்ளது.” என்று கூறினார்.
நீண்டகாலமாக சிறுநீரகக் கோளாறுகளால் அவதிப்பட்டு வரும் ஆர்ஜேடி தலைவர், கடந்த மாதம் சிங்கப்பூரில் பரிசோதனைக்காகச் சென்றிருந்தார்.
பீகார் முன்னாள் முதல்வர்களான லாலு பிரசாத் யாதவ் மற்றும் ராப்ரி தேவி தம்பதியின் ஏழு மகள்களில் ரோகினி இரண்டாவது மகள்.
இதுகுறித்து ஆர்ஜேடி தலைவர் ஒருவர் கூறியதாவது: லாலு பிரசாத் இதய கோளாறு உள்ளிட்ட பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருவதால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அவருக்கு நீண்ட ஆயுளைத் தரும். அவர் ஏற்கனவே 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் இரண்டு பெரிய இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார் என்று கூறினார்.
2013 முதல் லாலு பிரசாத் தீவிர அரசியலில் இருந்து விலகியிருந்தாலும், கட்சிக்கு வழிகாட்டும் சக்தியாகத் தொடர்கிறார். தேர்தலின் போது வேட்பாளர்களுக்கு சீட் கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்.
சமீபத்தில் டெல்லியில் நடந்த ஆர்.ஜே.டி கூட்டத்தில், லாலுவின் அரசியல் வாரிசு என்ற தேஜஸ்வியின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், இளைய மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி பிரசாத் யாதவ்வை கொள்கை விஷயங்களில் பேச லாலு அனுமதித்தார்.
லாலு பிரசாத்தின் மகள்களில், மூத்த மகள் மிசா பார்தி மட்டும் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, இரண்டாவது முறையாக ராஜ்யசபா எம்.பி.யாக உள்ளார்.
அவரது மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் நிதிஷ் குமார் தலைமையிலான பீகார் அரசில் அமைச்சராக உள்ளார். லாலு பிரசாத் யாதவ் தற்போது கால்நடை தீவன ஊழல் வழக்கில் ஜாமீனில் வந்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”