மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற லாலு பிரசாத் யாதவுக்கு 5 நாட்கள் பரோல் வழங்கி சிறைத்துறை அனுமதி அளித்துள்ளது. தனது மகனின் திருமணத்திற்காக அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் சமீபத்தில் நடந்த மாட்டுத்தீவன வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். மாட்டுத்தீவன ஊழலில் 4 வழக்குகள் நடைபெற்றது. 4 வழக்கிலும் லாலு குற்றவாளி என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு மொத்தமாக 14 ஆண்டுகள் சிறை தண்டனையும் 60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
ராஞ்சி பிர்சா முன்டா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் தற்போது உடல்நல குறைவால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் பரோல் கோரிக்கை ஏற்கப்பட்டு 5 நாட்கள் சிறையில் இருந்து வெளியே வருகிறார்.
இவரின் மகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான தேஜ் பிரதாப் யாதவுக்கு வரும் 12-ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. இதற்காக 5 நாட்கள் பரோல் அளிக்க வேண்டும் என்று அம்மாநில சிறைத்துறையிடம் லாலுவின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து விண்ணப்பித்தனர்.
இதையடுத்து அவருக்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிறைத்துறை 5 நாட்கள் பரோலில் வெளிவர அனுமதி வழங்கியுள்ளது.
முன்னதாக ஊழல் வழக்கில் சிக்கிய லாலுவுக்கு அவரின் மகன் நிச்சயதார்த்தம் நிகழ்வுக்கு பரோல் மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.