லாலு பிரசாத் கட்டாய வெளியேற்றம் : டெல்லி எய்ம்ஸ்-ல் இருந்து ராஞ்சிக்கு அனுப்பினர்

லாலு பிரசாத்தை இடம் மாற்றியதில் சதி இருப்பதாகவும், அவரை கொலை செய்யும் திட்டம் இருப்பதாக சந்தேகப்படுவதாகவும் தேஜஸ்வி குறிப்பிட்டிருக்கிறார்.

லாலு பிரசாத் வலுக்கட்டாயமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து ராஞ்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

லாலு பிரசாத் யாதவ், பீகார் அரசியலில் கொடி கட்டிப் பறந்தவர்! மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தும் பணியாற்றினார். பீகாரில் அவர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் அரங்கேறிய மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிக்கினார்.

லாலு பிரசாத் யாதவுக்கு 3 ஊழல் வழக்குகளில் தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட உடல் உபாதைகளில் அவதிப்பட்ட லாலு பிரசாத், ராஞ்சியில் அமைந்துள்ள ராஜேந்திரா இன்ஸ்டிடியூட்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

லாலு பிரசாத் உடல் நிலையில் அங்கு முன்னேற்றம் இல்லாததால், டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக மருத்துவமனைக்கு (எய்ம்ஸ்) அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று (ஏப்ரல் 30) காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று லாலு பிரசாத்தை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

இந்தச் சூழலில் இன்று பிறபகலில் லாலு பிரசாத் யாதவ், எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மீண்டும் ராஞ்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக எய்ம்ஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘லாலு பிரசாத் யாதவ் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து அவரது உடல்நலப் பிரச்னைகளுக்கு ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கலாம். இங்கிருந்து பயணம் செய்வதற்கு தகுதியான நிலையில் அவரது உடல்நிலை இருக்கிறது’ என குறிப்பிட்டிருக்கிறது எய்ம்ஸ்.

ஆனால் வலுக்கட்டாயமாக தன்னை எய்ம்ஸ் வெளியேற்றுவதாகவும், இதன் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார் லாலு பிரசாத் யாதவ். ராஞ்சிக்கு கிளம்பும் முன்பு அவர் கூறுகையில், ‘சரியான மருத்துவ வசதிகள் இல்லாத இடத்திற்கு என்னை மாற்றுகிறார்கள். இது எனக்கு கடினமான நேரம். ஆனால் இதையும் நான் எதிர்கொள்வேன்’ என நிருபர்களிடம் கூறினார் லாலு பிரசாத்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திற்கு லாலு எழுதிய கடிதத்தில், ‘ராஞ்சி மருத்துவமனைக்கு மாற்றப்படுவதை நான் விரும்பவில்லை. எனது உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வசதி அங்கு இல்லை’ என குறிப்பிட்டார். அதையும் மீறி எய்ம்ஸ் நிர்வாகம் அவரை ராஞ்சிக்கு அனுப்பி வைத்தது.

லாலு பிரசாத் யாதவின் மகனும், பீகார் முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், ‘எய்ம்ஸ்-ல் இருந்து எனது தந்தையை ராஞ்சிக்கு மாற்றும் முடிவை ஏதோ வெறுப்பின் அடிப்படையில் எடுத்துள்ளனர். எய்ம்ஸ் நல்ல மருத்துவமனைதான். ஆனால் திடீரென அவர்கள் எடுத்த இந்த முடிவு ஆச்சர்யமாக இருக்கிறது. ஏன் இதை செய்கிறார்கள்? என்பதை மருத்துவமனை நிர்வாகம்தான் தெளிவுபடுத்த வேண்டும்’ என்றார்.

லாலு பிரசாத்தை இடம் மாற்றியதில் சதி இருப்பதாகவும், அவரை கொலை செய்யும் திட்டம் இருப்பதாக சந்தேகப்படுவதாகவும் தேஜஸ்வி குறிப்பிட்டிருக்கிறார். லாலு பிரசாத் யாதவ் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் எய்ம்ஸ் வளாகத்தில் போராட்டம் நடத்தினர். மருத்துவமனை கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. அரசியல் ரீதியாகவும் இந்த விவகாரம் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close