மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பீகார் முதலமைச்சராக லாலுபிரசாத் யாதவ் இருந்த 1991-1994 காலகட்டத்தில் அரசு கால்நடைப் பண்ணைகளுக்கு மாட்டுத் தீவனம் வாங்கியதில் அரசு கஜானாவுக்கு 89 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. மேலும், சுமார் 950 கோடி ரூபாய் அவர் ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் லாலுபிரசாத் உள்ளிட்ட 15 பேர் குற்றவாளிகள் என ராஞ்சி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. மேலும், அவர்களுக்கான தண்டனை விவரங்கள் ஜனவரி 3-ஆம் தேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.
ஆனால், லாலு பிரசாத்தின் வழக்கறிஞர் விண்டேஸ்வரி பிரசாத் உயிரிழந்ததாலும், லாலு பிரசாத்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாலும், தண்டனை விவரம் அறிவிக்கப்படுவது மூன்று முறை தள்ளிப்போனது.
இந்நிலையில், இன்று தண்டனை விவரங்களை ராஞ்சி சிறப்பு சிபிஐ நீதிமன்றம், லாலு பிரசாத் யாதவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.