அயோத்தியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட ராமர் கோவிலில் உள்ள ராமர் சிலைக்கு வருகின்ற ஜனவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் பங்கெடுப்பதற்காக அழைக்கப்படும் நபர்கள் தொடர்பான பட்டியலை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை தயாரித்து வருகிறது.
கடந்த 2020ம் ஆண்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் பெயரில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில் ஜனவரி மாதம் நடைபெறும் கும்பாபிஷேகத்தில் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார். இதனிடையே இந்த அறக்கட்டளை 6,000 முதல் 8,000 நபர்களை விழாவிற்கு அழைக்க உள்ளது.
இது குறித்து இந்த அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறுகையில் “ எல்லா கலாச்சாரத்தில் உள்ள யோகிகள், துறவிகள், எல்லா சாதியைச் சேர்ந்த தலைவர்கள் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். இந்த நிகழ்வுக்கு அழைக்கப்படும் சிறப்பு விருந்தினர்கள் பட்டியல் தொடர்பாக பல்வேறு தரப்பில் உள்ள நபர்கள் தயாரிப்பு பணியில் ஈட்டுபட்டு வருகின்றனர்.
6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை விருந்தினர்களை அழைக்க உள்ளோம். அதிக அளவில் பெண்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்வு நடைபெறும் நாள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அடுத்த வருடம் ஜனவரி 15 முதல் ஜனவரி 24-க்குள் இடைபட்ட நாளில் இந்நிகழ்வு நடைபெறும்” என்று அவர் கூறினார்.
இந்த அறக்கட்டளை ஆனது, அடுத்த ஆண்டு மகர சங்கராந்தி திருநாளான ஜனவரி 14ம் தேதி முதல் பிரதிஷ்டை தொடர்பான நடைமுறையை தொடங்க உள்ளது. மேலும் 10 நாட்களுக்கு பிரதிஷ்டை சடங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளது.
இது குறித்து கோவில் கட்டுமான குழுவின் தலைவர் நிரிபேந்திரா மிஸ்ரா பி.டி.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் “ பிரதிஷ்டை நிகழ்வு, ஜனவரி 22ம் தேதி நடைபெறலாம். ஆனால் இறுதி தேதியை பிரதமர் அலுவலகம் முடிவு செய்து அறிவிக்கும்” என்று கூறினார். தொடர்ந்து ராய் பேசுகையில் “ 3 முக்கிய சிற்பிகள் இந்த சிலையை செதுக்கி உள்ளனர். நேப்பாளம், ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 3 கல்லில் இந்த சிலை செதுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.
நிரிபேந்திரா மிஸ்ரா கூறுகையில் “ வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் 3 தளங்கள் கொண்ட கோவிலின் தரைதளத்திற்கான வேலை நிறைவு செய்யப்படும். கோவிலின் கோபுரத்தில் அப்பாரட்டஸ் ( apparatus) நிறுவப்படும். இதன் மூலம் சூரியக் கதிர்கள் ராமர் சிலையின் தலைக்கு மேலே விழும்படி செயல் திட்டம் வடிவமைக்கப்படும் “ என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“