/indian-express-tamil/media/media_files/9JN1jpVbnDOGno98Az7L.jpg)
மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ஹர்ஷாதிபதி வால்மீகியைத் தாக்கியதாகவும், ஜாதிவெறியுடன் அவதூறாகப் பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட பாரி தொகுதி எம்.எல்.ஏ கிரிராஜ் சிங் மலிங்காவை பா.ஜ.க.,வில் சேர்த்துக்கொண்டார். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)
29 வயதான ஹர்ஷாதிபதி வால்மீகியின் குடும்ப உறுப்பினர்களுக்கு, காங்கிரஸ் எம்.எல்.ஏ கிரிராஜ் சிங் மலிங்கா ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க.,வில் இணைந்த செய்தி அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்தது.
ஆங்கிலத்தில் படிக்க: Left hanging by Congress, Rajasthan MLA accused of assaulting Dalit engineer joins BJP
கடந்த ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி, தோல்பூரில் மின்துறையின் பொறியாளராக பணியமர்த்தப்பட்ட ஹர்ஷாதிபதி வால்மீகி, தோல்பூர் மாவட்டத்தின் பாரி தொகுதி எம்.எல்.ஏ கிரிராஜ் சிங் மலிங்காவால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், கிரிராஜ் சிங் மலிங்கா தற்போது ஜாமீனில் உள்ளார்.
ஹர்ஷாதிபதி வால்மீகி மீதான தாக்குதல் வழக்கு, பாரி தொகுதி வேட்பாளராக கிரிராஜ் சிங் மலிங்காவை அறிவிக்க காங்கிரஸ் கால அவகாசம் எடுப்பதற்கு ஒரு காரணமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை வரை, காங்கிரஸ் பாரி தொகுதிக்கான தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை.
2008 முதல் தோல்வியைச் சந்திக்காமல் மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக இருந்து வரும் கிரிராஜ் சிங் மலிங்கா, ஞாயிற்றுக்கிழமை மத்திய ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் பா.ஜ.க.,வில் இணைந்தார்.
“கிழக்கு ராஜஸ்தானில் மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வாகி அபார செல்வாக்கு பெற்றுள்ள கிரிராஜ் சிங் மலிங்கா, காங்கிரஸிடம் இருந்து சீட்டுக்கு உத்தரவாதம் அளித்தும் இன்று பா.ஜ.க.,வில் இணைகிறார். கிரிராஜ் சிங் மலிங்கா களத்தில் செல்வாக்கு மிக்க தலைவர். அனைத்து 36 கௌம் (சமூகங்கள்) மீதும் அவரது செல்வாக்குடன், அவர் தோல்பூரில் மட்டுமல்ல, கிழக்கு ராஜஸ்தான் முழுவதிலும் தனது கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளார். அவர் பா.ஜ.க குடும்பத்துடன் இணைவதன் மூலம், அந்த முழுப் பகுதியிலும் பா.ஜ.க.,வின் பலம் நிச்சயமாக பல மடங்கு அதிகரிக்கும்,” என்று கிரிராஜ் சிங் மலிங்காவை கட்சிக்குள் சேர்க்கும் போது ஜெய்ப்பூரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறினார்.
கடந்த ஆண்டு முதல் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் இருக்கும் ஹர்ஷாதிபதி வால்மீகியின் உறவினர்கள் இந்தச் செய்தியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/40f11d03-0ad.jpg)
மூத்த பா.ஜ.க எம்.எல்.ஏ.,வும், ராஜஸ்தான் எதிர்க்கட்சித் தலைவருமான ராஜேந்திர ரத்தோர், கடந்த ஆண்டு ஏப்ரலில் தலித் பொறியாளர் ஹர்ஷாதிபதி வால்மீகியை மருத்துவமனையில் சந்தித்தார். (எக்ஸ்பிரஸ் புகைப்படம்)
“எதிர்க்கட்சித் தலைவர் ராஜேந்திர ரத்தோர் உட்பட பல பா.ஜ.க தலைவர்கள், எனது மகனைச் சந்திக்க மருத்துவமனைக்கு வந்து, எம்.எல்.ஏ கிரிராஜ் சிங் மலிங்காவால் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தனர். இன்று அவரை பா.ஜ.க பதவியில் அமர்த்துவதைக் கண்டு அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்துள்ளோம். சமூகத்தின் விளிம்பில் உள்ளவர்களை முன்னணிக்குக் கொண்டு வர வேண்டும் என்று பேசும் பா.ஜ.க, இப்போது தலித்துகளைத் தாக்கும் நபர்களை கட்சியில் சேர்க்கிறது,” என்று பொறியாளர் ஹர்ஷாதிபதி வால்மீகியின் தந்தை முகேஷ் வால்மீகி கூறினார்.
இந்த தாக்குதலில் ஹர்ஷாதிபதி வால்மீகிக்கு தொடை எலும்பு முறிவு உட்பட பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் ஹர்ஷாதிபதி வால்மீகி கூறுகையில், தாக்குதலின் போது கிரிராஜ் சிங் மலிங்கா தன் மீது ஒரு நாற்காலியை வீசியதாகவும், சாதிய அவதூறுகளை வீசியதாகவும், முகத்தில் ஏறி நின்றதாகவும் கூறியிருந்தார்.
கிரிராஜ் சிங் மலிங்கா மீது குற்றம் சாட்டப்பட்ட எஃப்.ஐ.ஆர், எஸ்.சி/எஸ்.டி (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, ராஜஸ்தான் காவல்துறை மற்ற குற்றவாளிகளை கைது செய்தபோதும், எம்.எல்.ஏ.,வை கைது செய்யவில்லை. முதல்வர் அசோக் கெலாட்டை சந்தித்து, ஊடகங்கள் முன்பு தான் குற்றமற்றவர் என்று கூறிய பிறகு, மே 11, 2022 அன்று அவர் சரணடைந்தார். ஒரு நாள் கழித்து, தோல்பூரில் உள்ள உள்ளூர் நீதிமன்றத்தால் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்ட கிரிராஜ் சிங் மலிங்கா, கோவிட் -19 பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட ஒரு வாரத்தில், அவருக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
ஜாமீனில் வெளியே வந்த கிரிராஜ் சிங் மலிங்கா, அசோக் கெலாட்டுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டார், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டை அவரது பிறந்தநாளில் சந்தித்தார், பாரத் ஜோடோ யாத்திரையின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நடந்து சென்றார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ராஜஸ்தான் முழுவதும் தலித் அமைப்புகள் கிரிராஜ் சிங் மலிங்காவுக்கு எதிராக தொடர்ச்சியான பிரச்சாரத்தை மேற்கொண்டன, மேலும் அவருக்கு டிக்கெட் வழங்கக்கூடாது என்று காங்கிரஸை வலியுறுத்தின. பாரி தொகுதியில் இருந்து கிரிராஜ் சிங் மலிங்காவை களமிறக்குவதை நிறுத்தி வைப்பதன் மூலம் காங்கிரஸ் கட்சி தலித் அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்ததாகத் தெரிகிறது. எம்.எல்.ஏ.வுக்கு எதிராக தலித் அமைப்புகள் நடத்திய வழக்கும் பிரச்சாரமும் முடிவெடுக்காததற்கு காரணம் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
2022 ஆம் ஆண்டில், இந்த வழக்கில் காங்கிரஸ் மற்றும் கிரிராஜ் சிங் மலிங்காவை பா.ஜ.க கடுமையாக சாடியது. கடந்த ஆண்டு ஏப்ரலில், ராஜேந்திர ரத்தோர், ஹர்ஷாதிபதி வால்மீகியை மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்ட பிறகு, ட்வீட் செய்ததாவது: “இன்று, எஸ்.எம்.எஸ் மருத்துவமனையை அடைந்த பிறகு, உதவி பொறியாளர் ஹர்ஷாதிபதி வால்மீகியின் உடல் நலம் குறித்து விசாரித்தேன், பாரி தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் காழ்ப்புணர்ச்சி மற்றும் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர், அவரது உடல்நிலை குறித்த தகவல்களை மருத்துவர்களிடம் இருந்து கேட்டுப் பெற்றேன். இந்த படங்கள் தானாகவே காங்கிரஸ் ஆட்சியின் காட்டு ராஜ்ஜியத்தை விவரிக்கின்றன.”
/indian-express-tamil/media/post_attachments/cd02fca8-22a.jpg)
ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் ஹர்ஷாதிபதி வால்மீகி
ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க.,வில் இணைந்த பிறகு, கட்சியால் "துன்புறுத்தப்பட்டதால்" காங்கிரஸை விட்டு வெளியேறியதாக கிரிராஜ் சிங் மலிங்கா கூறினார். “நான் சில காலம் காங்கிரசில் இருந்தேன். எந்த காரணமும் இல்லாமல் நான் மிகவும் துன்புறுத்தப்பட்டேன்,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார். என் மீதான குற்றச்சாட்டு "போலியானது" என்றாலும் கூட தனது கட்சி அல்லது அரசாங்கத்திடம் இருந்து தனக்கு எந்த ஆதரவையும் பெறவில்லை என்று கிரிராஜ் சிங் மலிங்கா கூறினார்.
“எம்.எல்.ஏ கிரிராஜ் சிங் மலிங்காவுக்கு எதிராக பா.ஜ.க நீண்ட காலமாக பிரச்சாரம் செய்தது, அரசு ஊழியர் மீது தாக்குதலைத் தூண்டியதாக பா.ஜ.க தலைவர் குற்றம் சாட்டினார். அவரைத் தனது கட்சியில் சேர்த்துக் கொண்டதன் மூலம், பா.ஜ.க தனது சுயநலத் தேவைகளை நிறைவேற்ற கறைபடிந்த நபரை சேர்த்துக் கொள்ளும் என்பதை நிரூபித்துள்ளது. கறைபடிந்த தலைவர்களைச் சேர்த்து, அரசியலில் கிரிமினல் சக்திகளை ஊக்குவிப்பதன் மூலம் அதிகாரத்தைப் பெறுவதற்கான வழி” என்று மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஸ்வர்ணிம் சதுர்வேதி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.