புதிய மதுபான தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பா.ஜ.க - என்.ஆர் காங்கிரஸ் அரசின் பட்ஜெட்டை கண்டித்தும் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் புதுச்சேரி சட்டப்பேரவை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
என்.ஆர் காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி அரசின் பட்ஜெட்டை கண்டித்தும், மாற்றுத் திட்டங்களை வலியுறுத்தி இன்று சட்டமன்றம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்திருந்தன.
அதன்படி இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சட்டப்பேரவை அருகே நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா கலை நாதன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில செயலாளர் ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து புதுவை அரசை கண்டண உரையாற்றினார்கள்.
அப்போது புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கக்கூடாது,ரெஸ்டோ பார்களை முறைப்படுத்த வேண்டும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும், ஜவுளி பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.