ஜிப்மர் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து தலைமை செயலக கருத்தரங்க அறையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய தமிழிசை சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.
அவர் கூறுகையில், "ஜிப்மர் நிர்வாகத்திற்கு வழிகாட்டுதல் வழங்க, நடவடிக்கைகளை கண்காணிக்க ஒரு வழிகாட்டுதல் குழு அமைக்கப்படும். ஜிம்பர் மருத்துவமனையில் புதிதாக நடைபெறும் பணி நியமனங்களில் தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் ஏழை-எளிய மக்கள் திருப்பி அனுப்ப கூடாது. மருந்துகள் இருப்பு இல்லை என்ற நிலையை தவிர்க்கும் வகையில் அவசியமான மருந்துகள் போதிய இருப்பு ஏற்படுத்த வேண்டும். நோயாளிகளுக்கு மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் மக்கள் மருந்தகங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். மருந்தகங்களில் நெரிசலையும், வரிசைகளையும் குறைக்கும் வகையில் கூடுதல் கவுண்டர்கள் ஏற்படுத்த வேண்டும். வரிசை இல்லா மருத்துவமனையாக மாற்ற வேண்டும்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கும் வழிகாட்டுதல் வழங்கும்படியாக 4 அல்லது 5 மக்கள் தொடர்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இரவு நேரங்களிலும் வழிகாட்டுதல் வழங்கும் வகையில் உதவி மையங்கள் ஏற்படுத்த வேண்டும். 25 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வழிமுறை கண்டறிய வேண்டும். ஜிப்மர் மருத்துவமனையை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அவரச சிகிச்சைக்கான படுக்கைகளை அதிகரித்து, அவரச சிகிச்சைக்கு என தனியாக ஒரு கட்டடம் ஏற்படுத்த வேண்டும். புற்றுநோய்க்கான சிறப்பு சிகிச்சைப் பிரிவு போன்றவையும் இதில் இடம்பெற வேண்டும். பொது மக்களின் சேவைக்காக இயங்கும் இந்த நிறுவனம் நிர்வாக குறைபாடுகள் இல்லாமல் முற்றிலும் மக்களுக்காகவே செயல்பட வேண்டும்" என கூறினார்.
இந்த கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திரபிரியங்கா, சாய் ஜே. சரவணன் குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, தலைமைச் செயலர் ராஜுவ் வர்மா, சுகாதாரத்துறைச் செயலர் உதயகுமார், ஆளுநர் செயலர் அபிஜித் விஜய் சவுதரி, ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“