/indian-express-tamil/media/media_files/2025/05/25/328Cp0iwNIvLTFblFKzy.jpg)
கேரள மாநிலம் கொச்சி அருகே லைபீரியா நாட்டு கொடியுடன் கூடிய 184 மீட்டர் நீளமுள்ள MSC ELSA 3 என்ற சரக்கு கப்பல் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து மே 23 ஆம் தேதி புறப்பட்ட இந்த கப்பல், மே 24 ஆம் தேதி கொச்சியை சென்றடைய திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கொச்சிக்கு தென்மேற்கே சுமார் 38 நாட்டிகல் மைல் தொலைவில் கப்பல் சென்று கொண்டிருந்தபோது, மதியம் சுமார் 1:25 மணியளவில் கப்பலில் 26 டிகிரி சாய்வு ஏற்பட்டதாக கப்பல் மேலாண்மை நிறுவனம் இந்திய அதிகாரிகளுக்கு அவசர தகவல் அளித்தது. இதனையடுத்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய இந்திய கடலோர காவல்படை, மீட்பு நடவடிக்கைகளை தீவிரமாக ஒருங்கிணைத்து வருகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த கடலோர காவல்படையின் கப்பல்களும், இந்திய கடற்படையின் ஒரு கப்பலும் மீட்பு பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. மேலும், அப்பகுதி முழுவதும் விமானங்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கப்பலில் இருந்த 24 மாலுமிகளில் இதுவரை 9 பேர் உயிர் காக்கும் படகுகளில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 15 மாலுமிகளை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மீட்பு நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்தும் வகையில், இந்திய கடலோர காவல்படையின் டோர்னியர் ரக விமானங்கள் கூடுதல் உயிர் காக்கும் படகுகளை கப்பலுக்கு அருகில் வீசியுள்ளன. இந்த விபத்து குறித்து அறிந்ததும், கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் (DG Shipping), இந்திய கடலோர காவல்படையுடன் இணைந்து, கப்பலை உடனடியாக மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கப்பல் மேலாண்மை நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையை இந்திய கடலோர காவல்படை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறது. உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் தடுப்பதோடு, இப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். மீட்பு பணிகள் முழுமையடையும் வரை இந்திய கடலோர காவல்படை அப்பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கப்பலில், 367.1 மெட்ரிக் டன் சல்பர் எரிவாயு எண்ணெயும், 84.4 மெட்ரிக் டன் கேஸ் எண்ணெயும் ஏற்றி வரப்பட்டுள்ளது. இந்த எண்ணெய் கடலில் கலந்தால், மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த எண்ணெய் கடலில் கலக்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை கடலோர காவல் படையினர் மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.