LIC IPO key Divestment numbers: கடந்த ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது அதிகமாக பேசப்பட்ட டிஸ்இன்வெஸ்ட்மெண்ட் பற்றிய அறீவிப்புகள் இந்த ஆண்டு குறைந்துள்ளது.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு 2021-22 நிதி ஆண்டில் பங்குவிலக்கல் (disinvestment) மூலம் ரூ. 1.75 லட்சம் கோடியை பெற இலக்கு நிர்ணயித்த நிலையில் பிறகு அவை ரூ. 78 ஆயிரம் கோடியாக மாற்றப்பட்டது. இந்த ஆண்டில் இந்த இலக்குகள் மிகவும் குறைக்கப்பட்டு ஒரு மென்மையான எல்லையை நிர்ணயித்திருக்கிறது என்றே கூறலாம். பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் இந்த ஆண்டுக்கான பங்குவிலக்குல் இலக்காக ரூ. 65 ஆயிரம் கோடியை நிர்ணயம் செய்துள்ளார்.
கடந்த ஆண்டில் ஹால்மார்க் வார்த்தையாக பயன்படுத்தபப்ட்ட தனியார்மயமாக்கல் (privatisation) என்ற வார்த்தையை இந்த நிதி ஆண்டில் நிதி அமைச்சர் பயன்படுத்தவில்லை. நன்கு நிறுவப்பட்ட வணிகங்கள் மற்றும் நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை எதிர்த்து தொடர்ந்து எதிர்க்கட்சியினர் அரசாங்கத்தை தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிதியாண்டில் ரூ.78,000 கோடி என்ற திருத்தப்பட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், மார்ச் மாதத்திற்குள் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் உத்தேச பொது வெளியீட்டைப் பொறுத்தே இந்த இலக்கு இருக்கும்.
2020-21ம் நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலமாக அரசு ரூ. 37,896 கோடி வருவாய் ஈட்டியது. இந்த நிதி ஆண்டில் இதுவரை ரூ. 12,030 கோடி வருவாயை ஈட்டியது என்று அதிகாரப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இதுவரை பங்குவிலக்கல் மூலமாக திரட்டிய அதிகபட்ச நிதி என்பது 2017-18 ஆம் ஆண்டில் அரசாங்கம் ஈட்டிய ரூ.1,00,045 கோடியாகும்.
தனியார் மயமாக்குதல் மற்றும் சொத்துகளை விற்று பணமாக்குதல் போன்றவை கடந்த ஆண்டு பட்ஜெட்டின் தனிச்சிறப்பாகும். ஏர் இந்தியா மற்றும் நீலாச்சல் இஸ்பத் நிகாம் லிமிடெட் நிறுவனங்களை டாடா குழுமத்திற்கு விற்று, தேசிய பணமாக்க பைப்லைனை அரசாங்கம் கொண்டு வந்தாலும், அரசுக்கு சொந்தமான வங்கிகளை தனியார் மயமாக்குவது இன்னும் வேகமாக நடைபெற துவங்கவில்லை.
புதிய பொதுத்துறை நிறுவனக் கொள்கையை அமல்படுத்தும் நோக்கில், ஏர் இந்தியாவின் உரிமையின் மூலோபாய பரிமாற்றம் நிறைவடைந்துள்ளது. NINL (நீலாச்சல் இஸ்பாட் நிகாம் லிமிடெட்)க்கான உத்திசார் பங்குதாரர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதே போன்று எல்.ஐ.சியின் பொது வெளியீடு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற திட்டங்களும் 2022-23 நிதி ஆண்டில் செயல்பாட்டில் உள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது குறித்து அவர் பேசினார். இந்த தேதி வரை சம்பந்தப்பட்ட சட்டங்களில் திருத்தங்களுக்கான அமைச்சரவைக் குறிப்பு வரைவு, அமைச்சகங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை அளவிலேயே உள்ளது என்று பட்ஜெட் ஆவணங்கள் கூறுகின்றன.
பொருளாதார மீட்சியின் வேகத்தில் முன்னேற்றம், நிதியாண்டில் பங்கு விலக்கல் ரசீதுகளை அதிகரிக்க புதிய வழிகளை வழங்கும் என்று அரசாங்கம் கூறியது.
இந்த காலாண்டு முடிவதற்குள் எல்ஐசி ஐபிஓவைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு முடிவு செய்தாலும், இரண்டு அரசுக்குச் சொந்தமான வங்கிகள் மற்றும் எண்ணெய் நிறுவனமான பிபிசிஎல் ஆகியவற்றின் தனியார்மயமாக்கல் அடுத்த ஆண்டு வரை நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பட்ஜெட் தாக்கலில் ஒரு முக்கிய அம்சமாக கருதப்பட்ட நான்கு பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றைத் தனியார்மயமாக்குவதற்கான கட்டமைப்பு பொதுக் காப்பீட்டு வணிக (தேசியமயமாக்கல்) சட்டத்தில் திருத்தங்களுடன் கடந்த ஆண்டு நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. காப்பீட்டாளர் இலக்கு பங்கு விற்பனை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிலுவையில் உள்ள ஐடிபிஐ வங்கியின் பங்கு விற்பனையும் அடுத்த ஆண்டு வரை நீடிக்கும் என்று பங்கு சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வங்கிச் சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2021 இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பாக கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த பட்டியலிடப்பட்டது. வரைவு தயார் நிலையில் இருந்த போதும் அமைச்சரவையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். வங்கி தொழிற்சங்கங்களின் தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு, விவசாய சட்டங்களை திரும்பப் பெறுதல் மற்றும் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்கள் ஆகியவை வங்கிகளை தனியார்மயமாக்கும் நிகழ்வை பாதித்துள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனத்தை தனியார்மயமாக்குவதற்கு முன்மொழியப்படுகிறது. இதற்கு தேவையான சட்டத்திருத்தங்களை நான் இதே அமர்வில் அறிமுகம் செய்கிறேன் என்று கடந்த நிதி ஆண்டில் நிர்மலா சீதாராமன் கூறினார்.
ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பிஇஎம்எல், கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் பவன் ஹான்ஸ் ஆகியவை தனியார்மயமாக்கல் வரிசையில் உள்ள மற்ற நிறுவனங்களாகும். பவன் ஹன்ஸ் மற்றும் நீலாச்சல் இஸ்பத் நிகாம் லிமிடெட் ஆகியவற்றிற்கான நிதி ஏலத்தை அரசாங்கம் பெற்றுள்ளது, மேலும் தனியார்மயமாக்கல் செயல்முறை இறுதி கட்டத்திற்கு முன்னேறியுள்ளது.
6 லட்சம் கோடி மதிப்பிலான நான்கு ஆண்டு தேசிய பணமாக்க பைப்லைனையும் (NMP) அரசாங்கம் வெளியிட்டது. சாலைகள், ரயில்வே மற்றும் மின் துறை சொத்துக்கள் பணமாக்கப்பட வேண்டிய சொத்துகளின் மொத்த மதிப்பீட்டில் 66% க்கும் அதிகமாக உள்ளன. மீதமுள்ளவை தொலைத்தொடர்பு, சுரங்கம், விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள், இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலிய தயாரிப்பு குழாய்கள், கிடங்குகள் மற்றும் அரங்கங்கள் ஆகியவை ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil