பீகார் ரயில் நிலையத்தில் புலம்பெயர்ந்த பெண் இறந்த நிலையில், அவருடைய குழந்தை அம்மா இறந்ததை அறியாமல் அவரை எழுப்ப முயன்ற மனதை உலுக்கும் சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்வத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், வேலைக்காக தங்கள் மாநிலங்களை விட்டு வேறு மாநிலத்துக்கு சென்ற பல ஆயிரக் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அந்தந்த மாநிலங்களிலேயே சிக்கிகொண்டனர். அரசு தொண்டு நிறுவனங்கள் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவினாலும் அது போதுமானதாக இல்லை.
பொது முடக்கம் 4வது கட்டமாக மே 31-ம் தேதி நீட்டிக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் எப்போது கட்டுப்படுத்தப்படும், பொது முடக்கம் எப்போது முடியும் என்பது பற்றி எந்த நிச்சயமும் இல்லை என்று உணர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போக்குவரத்து வசதி இல்லாத நிலையில் தங்கள் சொந்த ஊருக்கு கால் நடையாகவே நடக்கத் தொடங்கினர். சிலர் ஏதேனும் சரக்கு வாகனங்களில் மறைந்து சென்றனர்.
அப்படி சென்ற புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல நூறு கிலோ மீட்டர்களை கால்நடையாகவே நடக்கத் தொடங்கினர். அப்படி சென்ற தொழிலாளர்கள் மகாரஷ்டிராவில் அவுரங்காபாத் நாந்தேட் ரயில் பாதையில் மே 8-ம் தேதி சரக்கு ரயில் மோதி 16 பேர் உயிரிழந்தனர்.
மே 15-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சென்ற வாகனம் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தானில் இருந்து பீகார், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று கொண்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் லாரி மே 16-ம் தேதி உ.பி.யில் அவுரையா என்ற இடத்தில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இப்படி இந்த கொரோனா பொது முடக்க காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரம் தொடர்கிறது.
இதனிடையே, மத்திய, மாநில அரசுகள் பொது முடக்கத்தில் தளர்வுகளை அறிவித்தது. மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்கள் பேருந்துகள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், பீகார் முசாபர்பூர் ரயில் நிலையத்தில், புலம் பெயர்ந்த பெண் தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்துள்ளார். அவருடைய குழந்தை அம்மா இறந்தது தெரியாமல் அம்மாவை எழுப்ப முயற்சி செய்துள்ளது. அவர் எழுந்துகொள்ளாததால், அந்த குழந்தை தாயின் போர்வைக்குள் புகுந்து விளையாடுவதும் பின்னர் வெளியே வருவதுமாக இருந்தது. இந்தக் துயரம் பார்ப்பவர்களின் மனதை உளுக்கும் படியாக உள்ளது.
தாய் இறந்தது தெரியாமல் குழந்தை எழுப்ப முயன்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பலரின் நெஞ்சை உலுக்கி வருகிறது.
புலம்பெயர்ந்த பெண் வெளியானது குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியில், 23 வயதான அந்தப் பெண் தாகத்தாலும் பட்டினியாலும் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர் புலம்பெயர்ந்தோருக்கான சிறப்பு ரயிலில் குஜராத்தில் இருந்து பீஹார் முசாபர்பூர் ரயில் நிலையத்துக்கு வந்தார். இந்த பெண்ணின் குடும்பத்தினர், இந்த பெண் குடிக்க தண்ணீரும், உணவும் இல்லாமல் உடல் நலம் இல்லாமல் இருந்தார் என்று கூறுகின்றனர்.
இந்த நிலையில்தான், இந்தப் பெண் பீஹார், முசாபர்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அப்போது அவருடன் இருந்த குழந்தை அம்மா இறந்தது அறியாமல் அவரை எழுப்ப முயன்றுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி புலம்பெயர்ந்தோர் துயரத்துக்காக கேள்வி எழுப்பி வருகிறது.
இது குறித்து ரயில்வே அமைச்சகம் இந்தப் பெண் ரயிலிலேயே இறந்ததாக தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் பெண் கதிஹாருக்கு தன் சகோதரி, சகோதரியின் கணவன் 2 குழந்தைகளுடன் சென்றதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இந்த கொரோனா பொது முடக்க காலத்தில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் துயரம் எப்போது முடிவுக்கு வரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.