கர்நாடகா தேர்தல் 2018 : சித்தராமையாவின் போட்டியாளர் ஸ்ரீராமுலுவை தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் வற்புறுத்தல்

கர்நாடகா தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் காங்கிரஸ் கட்சியினர் பாஜக.வுக்கு எதிராக வீடியோ பதிவுகள் சிலவற்றை வெளியிட்டு அதிர வைத்தனர்.

கர்நாடகா தேர்தல் 2018, தேசிய முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பிரசாரம் முடிந்தும், அங்கு தேர்தல் அனல் ஓயவில்லை. இது தொடர்பான LIVE UPDATES இங்கே…

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2018, வாக்குப் பதிவு மே 12-ம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 223 தொகுதிகளில் மக்கள் தங்களின் பிரதிநிதிகளை தேர்வு செய்ய இருக்கிறார்கள். தேசிய கட்சிகளான பாரதிய ஜனதாவும், காங்கிரஸும் இங்கு ஆட்சியை கைப்பற்ற மல்லுக்கட்டுகின்றன.

கர்நாடகா தேர்தல், ஒருவகையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இதுவரை வேறு எங்கும் இல்லாத வகையில் காங்கிரஸ் தனது தேசியத் தலைமையை முன்னிறுத்துவதை விட, மாநிலத்தின் முதல்வரான சித்தராமையாவை அதிகமாக முன்னிறுத்தி இந்தத் தேர்தலை சந்திக்கிறது.

கர்நாடகா தேர்தலில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பாஜக.வோ, வழக்கம்போல பிரதமர் மோடியின் இமேஜையே அதிகம் நம்பியிருக்கிறது. 2 ஆண்டுகள் ஓய்வில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடைசி நாள் பிரசாரத்திற்கு வந்ததை ‘பூஸ்ட்’டாக அந்தக் கட்சி கருதுகிறது. ஆனால் பாஜக.வோ, ‘ராகுல் பிரசாரம் எடுபடாததால், சோனியாவை காங்கிரஸ் களம் இறக்கியதாக’ விமர்சிக்கிறது.

கர்நாடகா தேர்தல் க்ளைமாக்ஸ் காட்சிகளின் LIVE UPDATES

பகல் 1.05 : தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்த பிறகு கபில் சிபல், ரன்தீப் சிங் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

பகல் 1.00 : வீடியோ பேரத்தில் சிக்கிய ஸ்ரீராமுலு, கர்நாடகா முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து படாமி தொகுதியில் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. அவரை தகுதி நீக்கம் செய்யும்படி தேர்தல் ஆணையத்தில் வழங்கிய மனுவில் காங்கிரஸ் வலியுறுத்தி இருக்கிறது.

பகல் 12.00 : காங்கிரஸ் மூத்த தலைவர்களான கபில் சிபல், ரன்தீப் சர்ஜிவாலா, மோதிலால் வோரா, ஆர்.பி.என்.சிங் ஆகியோர் டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்துவிட்டு வெளியே வந்தனர்.

பகல் 11.45 : பாஜக.வுக்கு எதிரான வீடியோ பதிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட தடை தொடர்பாக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் முறையிட காங்கிரஸ் கட்சி சார்பில் முக்கிய தலைவர்கள் டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகம் வந்தனர்.

பகல் 11.40 : கர்நாடகா தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் தினேஷ் குண்டுராவ், மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி ஆகியோர் பாஜக.வுக்கு எதிராக வீடியோ பதிவுகள் சிலவற்றை வெளியிட்டு அதிர வைத்தனர். கடந்த 2010-ம் ஆண்டு கனிம சுரங்க அதிபர்களான ரெட்டி சகோதரர்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனின் உறவினரிடம் பாஜக மாநிலத் தலைவர்களில் ஒருவரான ஸ்ரீராமுலு பேரம் பேசியதாக காட்சிகள் அடங்கிய வீடியோ தொகுப்பு அது!

இந்தக் காட்சிகள் போலியானவை என பாஜக கூறியது. பாஜக புகாரின் அடிப்படையில் அந்த வீடியோ காட்சிகளை ஒளிபரப்ப மீடியாவுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

பகல் 11.40 : கர்நாடகா தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, ‘130 சீட்களுக்கு குறையாமல் கர்நாடகாவில் ஜெயிப்போம். வேறு கட்சிகளிடம் ஆதரவு கேட்போம் அல்லது ஆதரவு கொடுப்போம் என்கிற கேள்விகளுக்கு இடமே இல்லை’ என குறிப்பிட்டார்.

பகல் 11.30 : கடந்த 2016, ஆகஸ்ட் 2-ம் தேதி வாரணாசி தேர்தல் பிரசாரத்தில் மயங்கி விழுந்தபிறகு எந்த மாநில தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடவில்லை. 2 ஆண்டுகளுக்கு பிறகு கர்நாடகா தேர்தல் பிரசாரத்திற்காக அவர் வருகை தந்தது, இங்கு ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் காட்டும் மும்முரத்தை வெளிப்படுத்துகிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

×Close
×Close