LK Advani political career : நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட இருக்கும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை நேற்று பாஜக வெளியிட்டது. மார்ச் 16,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் பாஜக தேர்தல் குழு நடத்திய ஆலோசனையின் படி 184 வேட்பாளர்களை முதற்கட்ட அறிவிப்பில் வெளியிட்டார் பாஜக தேர்தல் குழுவின் செயலாளர் ஜேபி நட்டா.
அதில் உள்த்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு லக்னோ தொகுதி ஒதுக்கப்பட்டது. கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். பிரதமர் நரேந்திர மோடி உ.பி.யின் வாரணாசியில் போட்டியிடுகிறார்.
75 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்ற நிலைப்பாட்டை பாஜக தீவிரமாக பின்பற்றுவதால் பாஜகவின் மூத்த உறுப்பினர்கள் பலர் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. பாஜகவிற்கு அடித்தளமிட்ட லால் கிருஷ்ண அத்வானி என்ற எல்.கே. அத்வானிக்கே இடம் இல்லை என்பது தான் அதிர்ச்சியை அளித்துள்ளது.
1991ல் துவங்கி 6 முறை, குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் இருந்து மக்களால் தேர்வு செய்யப்பட்டு மக்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர். ஆனால் இன்று அவருடைய தொகுதி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவிற்கு அளிக்கப்பட்டுள்ளது. 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 2014ல் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் செயல்பட்டு வரும் அமித்ஷா சந்திக்கும் முதல் மக்களவைத் தேர்தல் இது தான்.
மேலும் படிக்க : அமேதியில் ராகுலுக்கு எதிராக போட்டியிடும் ஸ்மிரிதி இரானி
LK Advani political career : பாஜகவின் உருவாக்கமும் எல்.கே.அத்வானியின் பங்கீடும்
2014ல் நரேந்திர மோடி பிரதமராக பணியில் அமர்ந்தவுடன், வயது முதிர்ந்த பாஜக தலைவர்கள் அனைவரையும் மார்க்தர்ஷக் மண்டல் என்ற அமைப்பில் இணைத்து, புதிதாக பாஜகவை வந்தடையும் தலைவர்களுக்கு ஆலோசனை கூறும் பணிகளை கொடுத்து அரசியல் வாழ்வில் இருந்து ஓய்வு அளித்துவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
மறைந்த பிரதமர் வாஜ்பாய், எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி என பாஜகவை வடிவமைத்தவர்களை அங்கே அனுப்பி வைத்தது புதிய பாஜக தலைமை. இதை எல்.கே.அத்வானி மட்டும் அல்ல, யாருமே விரும்பாத, ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று.
பாரதிய ஜன சங்கத்தின் (1951 - உருவாக்கப்பட்ட ஆண்டு) உண்மையான தொண்டனாக இருந்து கட்சிக்காகவும், கட்சிப் பணிகளுக்கென்றும் தன்னை அர்பணித்தவர் எல்.கே. அத்வானி. இன்று இந்து - முஸ்லீம் மதக்கலவரங்கள் அனைத்திற்கும் பிறப்பிட செயலான ஒன்றைச் செய்தவர் எல்.கே.அத்வானி என்று கூறினாலும், ஒரு அடிமட்ட ஆர்.எஸ்.எஸ் தொண்டனாக வாழ்வைத் துவங்கி, தன்னோடு களத்தில் நின்ற நண்பனை பிரதமராக்கி அழகு பார்த்தது வரை அத்வானி அக்கட்சிக்காக உழைத்தது அதிகம் எனலாம்.
பாரதிய ஜன சங்கம் சார்பில் ஜன சங்க எம்பிகளுக்கு எம்.பிகளுக்கு உதவியாளராக பணியாற்ற டெல்லி அனுப்பப்பட்டார் அத்வானி. பிரச்சாரத்திற்கு தலைவர்கள் என்ன பேச வேண்டும் உட்பட அனைத்தையும் ஒரு காலத்தில் கவனித்துக் கொண்டரை, ராஜ்ய சபா எம்.பியாக அமர்த்தி அழகு பார்த்தது ஜன சங்கம்.
1971 தேர்தலில் படு தோல்வி அடைந்தது பாரதிய ஜன சங்கம். வீழ்ச்சியின் சரிவில் இருந்து கட்சியை மெல்ல மெல்ல மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டார் அத்வானி. மிசா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டார்கள். எல்.கே. அத்வானி சிறை சென்று திரும்பியதும் மீண்டும் தேர்தல்.
1977-ல் ஜெய பிரகாஷ் நாராயணன் அறிவுரையின் படி, ஜனதா கூட்டணியில் இணைந்தது போட்டியிட்டது ஜன சங்கம். வேட்பாளர்கள் தேர்வு, சின்னம், கொடி, தொகுதித் தீர்மானம், நிர்வாகம், காவிக்கொடி என அனைத்தையும் மேற்பார்வையிட்டு கவனித்து வந்தவர் எல்.கே.அத்வானி.
மொரார்ஜி தேசாய் பிரதமரானார். முரார்ஜி தேசாய், தகவல் தொழில்நுட்ப்பத் துறை அமைச்சரானார் அத்வானி. ஆனால் உட்கட்சிப் பூசல் வலுக்க, ஜனதாவில் இருந்து பிரிந்து சென்றனர் பாரதிய ஜன சங்கத்தினர்.
மோடியை கண்டெடுத்த எல்.கே.அத்வானி
பாரதிய ஜனதாவும், தாமரையும் எல்.கே.அத்வானி முன்னிலையில் தான் மலரத் துவங்கியது. ஒரு கட்சிக்கான அனைத்து வேலைகளையும் மிகவும் நுணுக்கத்துடன் கவனித்து வந்தார். தலைவராக வாஜ்பாய் நிற்க, தோளோடு துணை நின்று கட்சி ஒன்றை உருவாக்கினார். இன்று இந்தியாவில் படர்ந்திருக்கும் காவி வண்ணத்தின் முதல் புள்ளி எல்.கே.அத்வானி வைத்தது.
1980ல் பாஜக உருவானது. 1984 தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் தோல்வி. ரத யாத்திரைகள் தொடங்கியது. இந்துத்துவ கொள்கைகளை இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம் பரவச் செய்து, பாஜக என்று ஒரு கட்சி இருப்பதை அனைவருக்கும் அடையாளப்படுத்தியவர் எல்.கே.அத்வானி.
அதன் பின்பு தங்களின் இரூப்பினை உறுதி செய்ய இந்துத்துவா கொள்கைகளை மக்கள் மத்தியில் சேர்த்த விதமும், அதற்கு அவர் தேர்வு செய்த ஆயுதமும் மதக்கலவரங்களாக வட நாடுகளில் வெடிக்கத் துவங்கியது.
எப்படி தீனதாயாள் உபத்யாய் தன் பாதையில் தொடர்ந்து பயணிக்க இருக்கும் உண்மையான தொண்டர்களாக வாஜ்பாயையும், எல்.கே.அத்வானியையும் கண்டெடுத்தாரோ, அப்படியே எல்.கே.அத்வானி தன் வாழ்நாளில் அமித் ஷா, மோடி, ராஜ்நாத், மற்றும் அருண் ஜெட்லியை கண்டெடுத்தார். குஜராத் வன்முறை வெறியாட்டங்களால், மோடி மீது வாஜ்பாயே கடும் கோபத்தில் இருக்கும் போதும் அவருக்கு ஆதரவாய் துணை நின்றவர் எல்.கே.ஏ.
காந்தி நகர் வடக்கு, கலோல், சனாந்த், காட்லோடியா, வேஜல்புர், நாரான்பூரா, சபர்மதி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டது காந்திநகர் மக்களவைத் தொகுதி. கடந்த முறை தேர்தலில் 4.83 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் அத்வானி.
வயது மூப்பு காரணமாக இனி தேர்தலில் போட்டியிட்டு, பிரச்சாரங்களில் ஈடுபட முடியாது எல்.கே.அத்வானியால் என்பது அப்பட்டமான உண்மை. இம்முறை தேர்தலில் போட்டியில்லை என்று எல்.கே.அத்வானி அறிவித்த பின்பே அமித் ஷாவின் பெயர் அறிவிக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.