முதன்முறையாக வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவோடு சேர்த்து, சமூக வலைதள கணக்குகளின் விபரங்களையும் சமர்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவிருக்கிறது. கிளீன் பிரச்சாரத்திற்காக ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுள் போன்ற சமூக வலைதளங்களில் எழுதப்படுவதில் சிறப்புய் கவனம் செலுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது.
போலி செய்திகளை சரிபார்க்கவும், வதந்திகளை தடுக்கவும், சமூக வலை தளங்கள் அதிகாரிகளை நியமித்து, குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.
இவர்கள், தங்கள் தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் மீது தனிக் கவனம் செலுத்துவார்கள். சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் அனைத்து அரசியல் விளம்பரங்களுக்கும் முன் சான்றிதழ் தேவைப்படும்.
ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் மற்றும் யூ-ட்யூப் அரசியல்வாதிகளிடமிருந்து வெளியிடப்படும் விளம்பரங்களை சரி பார்க்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.