நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எந்த விவாதமும் இன்றி குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.
விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதாவைத் தாக்கல் செய்தார். அப்போது, வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்க தொடங்கினர்.
எதிர்க்கட்சிகளின் பலத்த அமளிக்கு இடையே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா வெகு விரைவாகக் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இது அடுத்து மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படவிருக்கிறது.
அவை ஒத்திவைப்பு
அவசர அவசரமாக வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அவையை இன்று மதியம் வரை ஒத்திவைத்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
இந்த வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா தாமதமாக ரத்து செய்யப்படுவது ஏன்? இதனை எதிர்த்துப் போராடிய விவசாயிகளின் உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பு? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன் வைத்தனர்.
விவசாயிகள் கடந்த ஓராண்டாகப் போராடி வந்த நிலையில், கடந்த 19-ம்தேதி அன்று 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாகப் பிரதமர் மோடி அறிவித்தார். வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 24-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. அதன்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்து அதன் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
போராட்டக்களத்தை விட்டு வெளியேறப்போவதில்லை
இதற்கிடையில், வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது குறித்து விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் திகைத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது பேசிய அவர், வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது போராட்டத்தில் உயிரிழந்த 750 விவசாயிகளுக்கு செலுத்தப்படும் அஞ்சலியாகும். குறைந்தபட்ச ஆதாரவிலை உள்பட மற்ற பிரச்சினைகள் இன்னும் நிலுவையில் உள்ளதால் போராட்டம் தொடரும். நாட்டில் போராட்டங்கள் நடைபெறக்கூடாது என்று மத்திய அரசு நினைக்கிறது. ஆனால், குறைந்தபட்ச ஆதார விலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் வரை போராட்டக்களத்தை விட்டு வெளியேறப்போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.