தேர்தல் சமயங்களில் பிற கட்சிகளை காட்டிலும் பாஜகவுக்கு விளம்பரம் செய்துகொள்வதற்காக குறைந்த கட்டணத்தை சமூக வலைதளமான முகநூல் நிர்ணயித்துள்ளதாக அல் ஜசீரா, தி ரிப்போர்ட்டர்ஸ் செய்தித்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.
இதுகுறித்து மக்களவையில் அவர் மேலும் பேசுகையில், சமூக வலைதளங்கள் இந்தியாவில் தேர்தல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்துப்படுவதற்கு முடிவு கட்ட வேண்டும். இந்திய ஜனநாயகத்தில் பேஸ்புக் தலையீட்டை நிறுத்துங்கள் என்றார்.
இந்திய பூர்விக குடிமக்களுக்கு சலுகை
வெளிநாடுவாழ் இந்தியர் (OCI) கார்டு, இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டவர் (PIO) கார்டு ஆகியவற்றை வைத்திருப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தியா வரலாம் என்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், மாநிலங்களவையில் தெரிவித்தார்.
மக்களவையில் காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாக்குவாதம்
கேரளத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கே-ரயில் சில்வர்லைன் திட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி.க்கள் தங்கள் குரலை மக்களவையில் பதிவு செய்தனர். இதனை கேரள மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள் எதிர்த்தனர்.
இதையடுத்து இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்தனர்.
இதனிடையே, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கேரளத்தில் அரசியல் தனித்துவமானது. டெல்லியில் நட்பாகவும், கேரளத்தில் எதிர் துருவத்திலும் கம்யூனிஸ்ட்டும், காங்கிரஸும் உள்ளது என்றார்.
முன்னதாக, கேள்வி நேரத்தின்போது, கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஈடன் பேசுகையில், சில்வர்லைன் திட்டத்தை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அமல்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தை நிறைவேற்றுகையில் எழும் சுற்றுச்சூழல் மற்றும் நிதிசார் பிரச்சனைகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கோரினார்.
நுண்ணியிரிகளை அழிக்கும் சக்தி வாய்ந்த காப்பர் கோட்டிங் 300 கோச்களின் கதவு பிடிகளில் பூசப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: உக்ரைனிலிருந்து இந்தியர்களை வெளியேற்ற உதவிய ரஷ்ய ராணுவம்; இதுவே முதல்முறை
கோவிட்-19 உள்பட பல்வேறு வைரஸ்களை அழிக்க காப்பர் கோட்டிங்கை பயன்படுத்தலாம் என்ற அமெரிக்காவின் சுற்றுச்சூழல் கொள்கை குறித்து மத்திய அரசு அறிந்து வைத்திருக்கிறதா என்று பாஜக எம்.பி. ராஜ்தீப் ராய் கேள்வி எழுப்பிார். இதற்கு பதிலளித்து ரயில்வே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
16 சீனர்களுக்கு இந்திய குடியுரிமை
இந்தியக் குடியுரிமை கோரியவர்களில் 16 பேருக்கு இதுவரை குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. 10 பேருடைய விண்ணப்பம் நிலுவையில் உள்ளது என்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், மாநிலங்களவையில் தெரிவித்தார்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்த சிவசேனை எம்.பி. வலியுறுத்தல்
சாமானியர்களின் சுமையை குறைக்கவும், அதிகரித்து வரும் பணவீக்கத்தை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் சிவசேனை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி மாநிலங்களவையில் வலியுறுத்தினார்.
பாகிஸ்தான் எல்லையில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்த சூப்பர்-சோனிக் ஏவுகணை விவகாரத்தை மிகவும் தீவிரமானதாக எடுத்துக் கொண்டுள்ளோம் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil