இடைத் தேர்தல் தோல்வி: தனிப் பெரும்பான்மை நெருக்கடியில் பாஜக!

கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் பாஜக 7 தொகுதிகளை தக்க வைக்கத் தவறியிருக்கிறது. இரு தொகுதிகளில் மட்டுமே ஜெயித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

By: May 31, 2018, 7:44:21 PM

இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளில் பாரதிய ஜனதா தோல்வியை தழுவியிருப்பது, நாடாளுமன்ற மக்களவையில் தனிப் பெரும்பான்மை நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாடு முழுவதும் 4 மக்களவைத் தொகுதிகளுக்கும், 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 31) நடந்தது. இதில் 4 மக்களவை தொகுதிகளில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் பல்கார் தொகுதியை மட்டுமே பாஜக தக்க வைத்திருக்கிறது. இதனால் மக்களவையில் பாஜக.வின் பலம் 273 ஆகியிருக்கிறது.

நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இந்த ஆண்டு நடந்த பல இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வியையே பெற்றதால் இந்த சறுக்கலை சந்தித்திருக்கிறது. இதனால் பாஜக.வின் தனிப்பெரும்பான்மை என்கிற அந்தஸ்துக்கு ஆபத்து வருமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. அண்மையில் கர்நாடகா தேர்தலையொட்டி பி.எஸ்.எடியூரப்பா, ஸ்ரீராமுலு ஆகியோர் தங்கள் எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்தனர். அவர்கள் ராஜினாமா செய்த நோக்கமும் நிறைவேறாமல் கட்சிக்கு பின்னடைவாகவே அமைந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மக்களவைக்கு கர்நாடகா மாநிலத்தில் இருந்து 3 எம்.பி. சீட்களும், ஜம்மு காஷ்மீரில் ஒரு சீட்டும் காலியாக இருக்கின்றன. எனவே இப்போது தனிப் பெரும்பான்மை என்பது 270-க்கு மேல் இருக்க வேண்டும். அந்த எண்ணிக்கையில் இருந்து 3 எம்.பி.க்கள் மட்டுமே கூடுதலாக இருக்கிறார்கள்.

2019- ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குள் இதில் மேலும் இழப்பு நேர்ந்தால், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு பாஜக.வுக்கு தேவைப்படும். கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் பாஜக 7 தொகுதிகளை தக்க வைக்கத் தவறியிருக்கிறது. இரு தொகுதிகளில் மட்டுமே ஜெயித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இடைத்தேர்தல் நிலவரம்: உறுப்பினர்கள் மறைவு, பதவி விலகல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு முழுவதும் காலியான 11 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 4 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 28-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில், உத்தர பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிராவின் பால்கர், பந்தாரா மற்றும் நாகாலாந்து ஆகிய மக்களவைத் தொகுதியின் முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தின.

கைரானா தொகுதியில் பா.ஜ.க. எம்பி. ஹூக்கும் சிங் மறைந்ததையடுத்து நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் அவரது மகள் மிரிங்கா சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். அவரை எதிர்த்து ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தபசும் ஹசன் போட்டியிட்டார். இவருக்கு காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் ஒன்று திரண்டு ஆதரவு அளித்தன.

கைரானா தொகுதியில் தபசும் ஹசன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல, மகாராஷ்டிராவில் பாஜக உறுப்பினர் மறைவு காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்பட்ட பந்தாரா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் வெற்றி பெற்றார். இதேமாநிலத்தின் பால்கர் தொகுதியில் பாஜக 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாத்தில் வெற்றி பெற்று தொகுதியை தக்க வைத்துள்ளது. நாகாலாந்து மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நாகலாந்து ஜனநாயக மக்கள் கட்சி முன்னிலையில் உள்ளது.

தங்களது வசமிருந்த 2 மக்களவை தொகுதிகளை பாஜக இழந்துள்ளது. சட்டசபை தொகுதிகளை பொறுத்தவரை, உத்தரபிரதேசத்தில் பாஜக வசமிருந்த நூர்புரில் சமாஜ்வாதி வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாபில் அகாலி தளம் வசமிருந்த ஷாகோட் தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. ஜார்கண்டில் கோமியா, சில்லி ஆகிய இரண்டு தொகுதிகளையும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தக்க வைத்துள்ளது. கேரளாவில் செங்கனூர் தொகுதியை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தக்க வைத்துள்ளது. பீகாரில் ஆளும் ஜனதா தளம் வசமிருந்த சோகிஹட் தொகுதியை லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி கைப்பற்றியுள்ளது.

மஹாராஷ்டிராவின் பாலஸ் காடேகான் சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேகாலயாவின் அம்பாடி தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துள்ளது. உத்தரகாண்டின் தாராலி தொகுதியை ஆளும் பாஜக தக்கவைத்துள்ளது.

மேற்கு வங்கத்தின் மஹேஸ்தலா தொகுதியை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தக்க வைத்துள்ளது. கர்நாடகாவில் வாக்காளர் அடையாள அட்டை கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டு தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட ஆர்.ஆர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

உத்தர பிரதேசம் உள்பட பல மாநிலங்களிலும் எதிர்க்கட்சிகள் அணிதிரண்டு வருவது, பாஜக.வுக்கு தேர்தல் முடிவுகளில் பின்னடைவை கொடுத்து வருகிறது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக.வுக்கு சவால் காத்திருக்கிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Loksabha bypoll 2018 bjp loss

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X