அடுத்த மாதம் அயோத்தியில் ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில், தன்னிப்பூரில் மசூதி கட்டுவதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளை மே மாதம் கட்டுமானப் பணிகளை தொடங்கும் என நம்புகிறது.
அயோத்தி மாவட்டத்தில் உள்ள தன்னிப்பூரில் உள்ள மசூதி, ராமர் கோவில் இடத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
ராம ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கின் நவம்பர் 2019 தீர்ப்பில், சர்ச்சைக்குரிய அயோத்தி இடத்தை கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கியது.
மேலும் அயோத்தியில் முஸ்லிம்களுக்கு மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம் வழங்கியது. உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, உத்தர பிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம், மே 2020 இல், மசூதி மற்றும் பிற கட்டமைப்புகளை நிர்மாணிப்பதற்காக இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளையை (IICF) அமைத்தது.
இந்த அறக்கட்டளை ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் மசூதி, மருத்துவமனை கம்யூனிட்டி கிச்சன், இந்திய-இஸ்லாமிய கலாச்சார ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட சமூக வசதிகளை கட்ட வேண்டும்.
தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய அறக்கட்டளையின் தலைமை அறங்காவலரும், உ.பி சன்னி மத்திய வக்ஃப் வாரியத்தின் தலைவருமான ஜுஃபர் ஃபரூக்கி, ’திட்டத்திற்கான காலக்கெடுவைக் கூறுவது மிகவும் கடினம். அடுத்த ஆண்டு மே மாத இறுதிக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.
திட்டத்திற்கான நிதி சேகரிப்பை மேற்பார்வையிட மும்பையில் ஒரு கட்டுமானக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிக நிதி சேகரிப்பதற்காக, ஹாஜி அர்பத் ஷேக் தலைமையில் மும்பையில் ஒரு கட்டுமானக் குழுவை உருவாக்கியுள்ளோம்.
நிதி வசூல் செய்யும் பணியில் குழு ஈடுபட்டுள்ளது. அக்டோபரில், நாங்கள் வடிவமைப்பை வெளியிட்டோம். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் கள அலுவலகத்தைத் திறக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
ஹாஜி அர்பத் ஷேக் மும்பையை சேர்ந்த பாஜக தலைவர், என்றார்.
மேலும் மே மாதம் தொடங்கும் கட்டுமானப் பணிகளுக்கு போதுமான நிதி சேகரிக்கப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, ஃபரூக்கி, ’தோராயமான நிதியை என்னால் சொல்ல முடியாது.
மும்பை மற்றும் மகாராஷ்டிராவில் வசூலிப்பதற்கான எங்களின் புதிய வங்கிக் கணக்கு அடுத்த சில நாட்களில் செயல்படுத்தப்படும். எங்களிடம் கணிசமான பொறுப்புகள் உள்ளன. நன்கொடை மற்றும் நிதிக்காக சில நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு சில உறுதிமொழிகள் உள்ளன’, என்றார்.
ஐஐசிஎஃப் (IICF) வட்டாரங்கள் தி சண்டே எக்ஸ்பிரஸிடம், ’மசூதி மற்றும் பிற திட்டங்களுக்கு நிதி திரட்டுவதன் மூலம் சுமார் ரூ. 50 லட்சம் திரட்டப்பட்டுள்ளது, என்று கூறியது.
இந்த ஆண்டு ஜூலை மாதம், நிதி பற்றாக்குறையை கருத்தில் கொண்டு அந்த இடத்தில் மருத்துவமனை கட்டுவதை ஒத்திவைத்ததாக ஐஐசிஎஃப் அறிவித்தது.
ஐஐசிஎஃப் செய்தித் தொடர்பாளரும் உறுப்பினருமான அதர் ஹுசைன் கூறுகையில், ’நிர்மாணக் குழுவில் சிலர் திட்டம் மற்றும் நிதி சேகரிப்பில் எங்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
எங்கள் தலைமை அறங்காவலர் (ஃபாரூக்கி) மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளுக்கு நிதி சேகரிப்பதற்காகச் சென்றிருந்தார், அவருடைய முயற்சியால் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நாங்கள் மசூதியை இந்தியாவில் உள்ள மற்ற மசூதிகளுக்கு இணையாக உருவாக்குகிறோம். நாங்கள் வடிவமைப்புகளை மீண்டும் வரைந்து அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க வேண்டும்,என்றார்.
Read in English: Looking at May to begin mosque construction near Ayodhya: Trust
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.