Jignasa Sinha
Afghan MP Anarkali Kaur Honaryar : என்னுடைய தந்தையும் என்னுடைய குடும்பத்தினரும் 20 ஆண்டுகளுக்கு முன்பு தாலிபான்களின் ஆட்சியில் பெரும் இன்னல்களுக்கு ஆளானோம். ஆனால் அப்போது நிலைமை வேறு. இப்போது தாலிபான்கள் மிகவும் வலுவாக உள்ளனர். நிச்சயமாக எங்களை அங்கே வாழ அனுமதித்திருக்க மாட்டார்கள் என்று கூறுகிறார் அனார்கலி கௌர் ஹோனார்யார். ஞாயிற்றுக் கிழமை காபூலில் இருந்து இந்தியாவின் காசியாபாத்தில் அமைந்திருக்கும் ஹிண்டன் விமானப்படை தளத்தில் விமானம் மூலம் மீட்கப்பட்ட 168 நபர்களில் அனார்கலியும் ஒருவர். அவர் ஆப்கான் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.
அந்நாட்டின், இஸ்லாமியர் அல்லாத பெண்ணாக நாடாளுமன்ற மேலவையில் ஹோனார்யார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.பியாக பதவி வகித்து வந்தார்.
என்னுடைய தாத்தாவும் அப்பாவும் அவர்களின் வாழ்நாள் முழுவதையும் ஆப்கானிஸ்தானில் கழித்தனர். என்னுடைய அப்பா அவருடைய பணியை ஒரு பொறியாளாராக துவங்கினார். பிறகு அவர் தேர்தல் ஆணையத்தின் உறுப்பினராக பணியாற்றினார். நானும் என்னுடைய உடன்பிறப்புகளும் அந்நாட்டின் அரசுக்காக பணியாற்றினோம் என்று திங்கள் கிழமை அன்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசினார் அனார்கலி.
காபூலை தாலிபான்கள் கைப்பற்றியது குறித்து பேசிய அவர் “ஆரம்பத்தில் நான் நாட்டைவிட்டு வெளியேறுவது குறித்து யோசிக்கவில்லை. ஆனால் விரைவில் அனைத்தும் மாறிவிட்டது. என்னுடைய அம்மா மிகவும் பயந்துவிட்டார். தாலிபான்கள் எங்களின் வீட்டுக்கு வெளியே நின்று எங்களை அங்கிருந்து வெளியே செல்லவிடவில்லை என்றால் என்ன செய்வது சிந்திக்க துவங்கினார். நாங்கள் அனைத்தையும் இழந்துவிட்டோம்” என்று அவர் கூறினார்.
காபூலை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ஹோனார்யாரும் அவருடைய குடும்ப உறுப்பினர்களும் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு பதிலாக சர்வதேச அமைப்புகள் அந்நாட்டிற்கு வரும் வரை காத்திருக்கலாம் என்று நினைத்துள்ளனர். ஆனால், ஆகஸ்ட் 15ம் தேதி அன்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கானி நாட்டைவிட்டு வெளியேறியதும் அவர்களின் நம்பிக்கை அனைத்தும் தகர்ந்தது.
நான் அலுவலகத்தில் தான் இருந்தேன். ஒரு நாளுக்கு முன்பு கூட நான் அவரை பார்த்தேன். அமைதிக்காக நாங்கள் போராடுவோம் என்று நினைத்தேன். பிறகு தாலிபான்கள் காபூலை கைப்பற்றியது தொடர்பாக தொடர்ந்து அழைப்புகள் வரத்துவங்கின. நாங்கள் அங்கிருந்து உடனே வெளியேற வேண்டிய சூழல் உருவானது. நான் என்னுடைய காரில் இருந்த போது மக்கள் தெருக்களில் இங்கும் அங்கும் ஓடுவதை கண்டேன் என்றார் அனார்கலி.
தன்னுடைய காரில் வீட்டுக்கு செல்ல அனார்கலி முயற்சி செய்த போது துப்பாக்கிச்சூடு சத்தம் அதிகரிக்கவே அனைவரும் தங்களின் வாகனங்களில் இருந்து இறங்கி தங்களின் வீடு நோக்கி ஓட வேண்டிய அவலம் ஏற்பட்டது.
வீடு திரும்பிய ஹோனார்யாரிடம் அவருடைய பெற்றோர்கள் தங்களின் சொந்தங்கள் பலரிடம் இருந்தும் காபூலை விட்டு வெளியேறுமாறு அழைப்பு வந்ததாக கூறியுள்ளனர். ஹோனார்யாரின் தோழி ஒருவருடைய வீட்டிற்குள் புகுந்த தாலிபான்கள் அவரை துன்புறுத்தியதோடு மட்டும் அல்லாமல் 50க்கும் மேற்பட்ட தாலிபான்களுக்கு இரவு உணவு சமைத்து தரக் கோரியும் கட்டாயப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
தன்னுடைய குடும்பத்தையும் தன்னுடைய தோழியையும் சமாதானப்படுத்தியுள்ளார் ஹோனார்யார். இருப்பினும் சில மணி நேரங்களில் அதிபர் நாட்டைவிட்டு வெளியேறிய விவகாரம் அவர்களுக்கு தெரிய வந்தது.
ஆரம்பத்தில் கானி எங்கே இருக்கிறார் என்று எங்களுக்கு தெரியவில்லை. பிறகு நாங்கள் அவருடைய வீடியோவை பார்த்தோம். என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. ஆனால் இந்நிகழ்வு எங்கள் அனைவரையும் வலுவிழக்க வைத்துவிட்டது. என்னுடைய அண்டை வீட்டினர், நண்பர்கள் எல்லாரும் ஆபத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரும் இன்னும் அந்நாட்டில் தான் உள்ளனர். நாங்கள் வாழும் பகுதிக்கு அருகே தாலிபான்கள் எங்களுக்கு அச்சுறுத்தலை கொடுக்க துவங்கினர். நாங்கள் எங்களின் ஆப்கான் நண்பர்கள் வீடுகளில் அல்லது குருத்வாராக்களில் தங்கலாம் என்று நினைத்தோம் ஆனால் அங்கே எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர் கூறினார்.
அனார்கலியின் தந்தை 2010ம் ஆண்டு அவரை தேர்தல்களில் போட்டியிட கூறிய பிறகு அனார்கலியின் அரசியல் வாழ்க்கை துவங்குகிறது. பல்மருத்துவரான அவர் ஆப்கானிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையத்தில் பணியாற்றினார். அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணித்த அவர், போர்களினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குடும்பங்களுக்கு சட்ட ரீதியான உதவிகளை புரிந்தார்.
2011ம் ஆண்டு யுனெஸ்கோவின் மதன்ஜீத் சிங் பரிசை, குடும்ப வன்முறையில் சிக்கிக் கொண்ட பெண்கள், கட்டாய திருமணம் மற்றும் பாலின அடிப்படையில் தீண்டாமைக்கு ஆளான பெண்களுக்கு உதவி புரிந்ததற்காக அவர் பெற்றார். அவரும் அவருடைய சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஹமீத் கர்சாய் மற்றும் அஷ்ரஃப் கானி போன்ற அதிபர்களுடன் பணியாற்றினார்கள். பெண்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி போன்ற விவகாரங்களில் கொள்கை மாற்றங்களுக்கு வழி வகுத்தனர்.
தற்போது அவருடைய வாழ்க்கை மற்றும் எதிர்காலம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில் உள்ளார். நான் என்னுடைய நாட்டிற்கு சென்று நிம்மதியாக வாழ வேண்டும். ஆனால் நான் என் வாழ்வில் மீண்டும் என்னுடைய நாட்டிற்கு செல்வேனா என்று எனக்கு தெரியவில்லை என்று அவர் கூறினார்.
தாலிபான்கள் காபூலை கைப்பற்ற 6 மாதங்களுக்கு மேல் ஆகும். நம்மிடம் நிறைய நேரம் இருக்கிறது என்று நினைத்தேன் ஆனால் அது அனைத்தும் தவறாகிவிட்டது. சில நாட்களிலேயே அவர்கள் காபூலை கைப்பற்றிவிட்டனர். சர்வதேச அமைப்புகள் ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் தனித்துவிடப்பட்டுவிட்டோம் என்று அனார்கலி கூறினார்.
என்னுடைய நண்பர்களைப் பற்றி நினைக்கும் போது மிகவும் பயமாக இருக்கிறது. பலரும் மிரட்டப்பட்டு வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். நான் என்னுடைய மக்களை அங்கே விட்டுவிட்டு வந்ததை நினைத்து மிகவும் வருந்துகிறேன். ஆனால் என்னிடம் வேறெந்த வழியும் இல்லை. தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டே இருந்தது. தாலிபான்களிடம் இருந்து தப்பிக்க இரண்டு நாட்கள் மறைந்திருந்தோம். எங்களிடம் உணவும் இல்லை. இந்தியாவில் நான் இப்போது என்ன செய்யப் போகிறேன் என்றும் தெரியவில்லை என்றும் அனார்கலி கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.