புதுச்சேரி அரசியலில் களம் இறங்கும் லாட்டரி அதிபர் சார்லஸ் மார்ட்டின் தனி கட்சி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், புதுவை பா.ஜ.க உடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், என்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து பல எம்.எல்.ஏ.க்கள் வெளியேறலாம் எனவும் கூறப்படுகிறது. புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் லாட்டரி அதிபர் சார்லஸ் மார்ட்டின் களம் இறங்க முடிவு செய்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பணிகளை சார்லஸ் மார்ட்டின் தனக்கு நெருக்கமான
பா.ஜ.க எம்.எல்.ஏ ஜான்குமார் மூலமாக தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காமராஜர் நகர் தொகுதியில் +2 மற்றும் 10ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
லாட்டரி அதிபர் சார்லஸ் மார்ட்டின் கலந்து கொண்டு சுமார் 400 மாணவர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஊக்க பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிலையில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், ரிச்சர்ட்ஜான்குமார், பா.ஜ.க ஆதரவு சுயேட்சை எம்எல்ஏக்கள் சிவசங்கரன், அங்காளன் மற்றும் கொல்லப்பள்ளி அசோக் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்பின் நடைபெற்ற காமராஜர் தொகுதி முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஜான்குமார், காமராஜர் நகர் தொகுதியில் சார்லஸ் மார்ட்டின் போட்டியிடுவார் என அறிவித்ததாக கூறப்படுகிறது. புதுச்சேரி அரசியலில் களம் இறங்க திட்டமிட்டுள்ள சார்லஸ் மார்ட்டின் தங்குவதற்கு புதுச்சேரி ஒயிட் டவுனில் ஒரு வீடு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
சார்லஸ் மார்ட்டினின் வாக்காளர் அடையாள அட்டையை காமராஜர் நகர் தொகுதியில் உள்ள ஒரு முகவரிக்கு மாற்றும் பணிகள் நடைபெறுவதாக தெரிகிறது. விரைவில் சார்லஸ் மார்ட்டின் தலைமையில் புதிய கட்சி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இக்கட்சியில் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார்,கல்யாணசுந்தரம், ரிச்சர்ட்ஜான்குமார் மற்றும் பாஜக ஆதரவுஎம்எல்ஏக்கள் சிவசங்கரன், அங்காளன், கொல்லபள்ளி அசோக் உள்ளிட்டவர்கள் இணைவார்கள் என கூறப்படுகிறது. (இந்த எம்.எல்.ஏ.க்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் பா.ஜ.க அமைச்சர்களை மாற்ற வேண்டும் என போர்க்கொடி தூக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது). இதனால், புதுச்சேரியில் பா.ஜ.க உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், என்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் சார்லஸ் மார்ட்டின் தரப்பினரிடம்
பேசி வருவதாகவும் சொல்லப்படுகிறது. காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் சார்லஸ் மார்ட்டின் தரப்பினரிடம் தொடர்பில் இருக்கின்றார்களாம். வரும் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதிக்கு 10 முதல் 15 கோடி வரை சார்லஸ் மார்ட்டின் தரப்பு செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லாட்டரி அதிபர் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரி அரசியலில் களம் இறங்க முடிவு செய்துள்ளது புதுச்சேரி அரசியல் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற காமராஜர் நகர் தொகுதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜான் குமார் எம்எல்ஏ முன்னிலையில் தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட 2023-24 ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா புதுவை வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் மற்றும் நெல்லி தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரிச்சர்ட் ஜான் குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கரன், அங்காளன் மற்றும் திரளான பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது, தன்னைவிட வயதில் சிறியவரான லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் காலில் சுயேச்சை எம்.எல்.ஏ அங்காளன் விழுந்த சம்பவம் புதுவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
புதுச்சேரியில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தனி தொகுதியான திருபுவனையில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அங்காளன். இவர் முன்னாள் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காமராஜர் நகர் தொகுதியை சேர்ந்த மாணவர்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற சுயேட்சை எம்எல்ஏ அங்காளன், விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வந்த லாட்டரி தொழிலதிபரின் மகன் சார்லஸ் மார்ட்டினிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு திடீரென காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களை வெளியாகி வைரலாகி வருகிறது. தன்னைவிட சிறியவரான தொழிலதிபரின் காலில் சுயேட்சை எம்எல்ஏ விழுந்த சம்பவம் புதுச்சேரி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“