Karnataka BJP chief Nalin Kumar Kateel on love jihad Tamil News: கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் மாத இறுதியிலோ அல்லது மே மாத தொடக்கத்திலோ நடைபெற உள்ளது. பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள இந்த தேர்தலுக்காக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க போன்ற தேசிய கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டன.
கடந்த டிசம்பர் 31 அன்று, பெங்களூருவில் பேசிய மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா, ‘கர்நாடக மக்களுக்கு, அயோத்தி, பத்ரிநாத் போன்ற இந்து வழிபாட்டுத் தலங்களை உருவாக்கியவர்களுக்கும், திப்பு சுல்தானை மகிமைப்படுத்துபவர்களுக்கும் இடையேயான தேர்வுதான் இந்த 2023 சட்டமன்றத் தேர்தல்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், “சாலை, சாக்கடை, வடிகால் மற்றும் பிற சிறிய பிரச்சனைகள்” போன்ற கவலைகளை தவிர்த்து, இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் “லவ் ஜிஹாத்” பிரச்சினைக்கு கர்நாடக மக்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று பாஜக மாநிலத் தலைவர் நளின் குமார் கட்டீல் தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் தேர்தலுக்கு மங்களூரு நகரின் தொகுதிகளில் கட்சி தொண்டர்களை தயார்படுத்துவதற்காக நேற்று முன்தினம் திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட ‘பூத் விஜய் அபியான்’ வெளியீட்டு விழாவில் பேசிய கட்டீல், “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை (பிஎஃப்ஐ) தடை செய்த மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்கிறோம். இது பல இந்து ஆர்வலர்களின் உயிர்களைக் காப்பாற்ற உதவியுள்ளது. இந்த சட்டவிரோத குழு பல கொலைகளை செய்ய சதி செய்தும் உள்ளது.
எனவே சாலைகள், சாக்கடைகள், வடிகால் மற்றும் பிற சிறிய பிரச்சினைகளைப் பற்றி பேச வேண்டாம் என்று நான் அவர்களிடம் சொன்னேன். உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை தொடர்பான பிரச்சினையான ‘லவ் ஜிஹாத்’ நிறுத்தப்பட வேண்டும் என்றால், நமக்கு பாஜக (அரசாங்கம் அமைக்க) வேண்டும், ”என்று அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நளின் குமார் கட்டீலின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. மேலும், “பாஜக தனது தோல்விகளையும், ஊழலையும் மறைக்கவே இந்த வகுப்புவாத கலவரத்தை பயன்படுத்துகிறது” என்றும் குறிப்பிட்டுள்ளது.
பாஜக தலைவர் கட்டீல் பேசிய வீடியோவை ட்வீட் செய்துள்ள கர்நாடக காங்கிரஸ் (கன்னடத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது): “… மாநிலத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவை சிறிய பிரச்சினைகள்! வளர்ச்சியைப் பற்றி பேச வேண்டாம் என்று பாஜக தனது கட்சியினரைக் கேட்டுக்கொண்டது வெட்கக்கேடானது. அதை அக்கட்சி கொஞ்சம் கூட செய்யவில்லை.” என்று பதிவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil