பொதுமக்கள் அவதி: கேஸ் சிலிண்டர் விலை 2-வது முறையாக உயர்வு!

நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

2-வது முறையாக மானியத்துடன் வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் திடீரென உயர்த்தியுள்ளன.

கேஸ் சிலிண்டர் விலை:

சமையல் கேஸ் சிலிண்டர்கள் முகவர்களுக்கு வழங்கப்படும் கமிஷன் தொகையை உயர்த்தப்பட்டுள்ளது. இதைக் காரணமாக காட்டி சிலிண்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் விலை  உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

கடந்த 1-ம் தேதி சிலிண்டர் விலையில் ரூ.2.94 காசு அதிகரிக்கப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 9 நாட்களுக்குள் சிலிண்டர் மீது ரூ.4.94 காசுகள் உயர்ந்துள்ளது. இந்த அறிவிப்பு  நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பது,”மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் கேஸ் சிலிண்டருக்கு விநியோகிஸ்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கமிஷன் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டுவரை 14.2 கிலோ சிலிண்டருக்கு கமிஷனாக ரூ.48.89 பைசாவும், 5 கிலோ சிலிண்டருக்கு ரூ.24.20 பைசாவும் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது 2 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், இனிமேல் கமிஷனாக 14.2 கிலோ சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50.58 பைசாவும், 5 கிலோ சிலிண்டருக்கு ரூ.25.29 பைசாவும் வழங்கப்படும். இந்த விலை மாநிலங்களின் உள்ளூர் வரிகள், போக்குவரத்துக் கட்டணம், கூலி உள்ளிட்டவை சேர்க்கப்படும் போது மாறுபடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தால்  டெல்லியில் 14.2 கிலோ சிலிண்டர் விலை இனி ரூ.507.42 பைசாவாக அதிகரிக்கும். மும்பையில் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.505.05 பைசாவாகவும், கொல்கத்தாவில் ரூ.510.70 பைசாவாகவும், சென்னையில் ரூ.495.39 பைசாவாகவும் இனி அதிகரிக்கும்.

வீட்டு உபயோக சிலிண்டருக்கு சென்னையி–்ல் டெலிவரி கட்டணமாக 19.50 இருந்தது. இது 20.50ஆக அதிகரித்துள்ளது. சிலிண்டரை ஏஜென்சிக்கே சென்று எடுத்து வந்தால் டெலிவரி கட்டணம் கிடையாது. எனவே,  ஏஜென்சிக்கு அருகில் இருப்பவர்கள், அல்லது டூவீலரில் சென்று எடுத்து வர முடிந்தால் இந்த கட்டணத்தை மிச்சப்படுத்தலாம்.

இப்படி மக்களின் அத்தியாவசிய தேவையான  சிலிண்டரின் விலை மாறி மாறி ஏறுவதால், பொதுமக்கள் பெருமளவில் கவலையடைந்துள்ளனர்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close