scorecardresearch

எல்.டி.சி, யூ.டி.சி பணியிடங்களுக்கு ஜூலையில் தேர்வு: முதல்வர் ரங்கசாமி தகவல்

மேல்நிலை, கீழ்நிலை எழுத்தர், உதவியாளர் பணியிடங்களுக்கு ஜூலை மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

Puducherry
Puducherry

புதுச்சேரி 100 அடி சாலையில் சுரங்கப்பாதை அணுகுசாலை ரூ.5 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இதேபோல அண்ணா சாலை முதல் இந்திரா காந்தி சிலை வரையில் மறைமலை அடிகள் சாலை புதிதாக ரூ.10 கோடியே 77 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று (மே 10) புதிய பேருந்து நிலையம் அருகே நடந்தது. முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை செய்து இந்த பணிகளை தொடங்கி வைத்தார்.

அடிக்கல் நாட்டு விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, “மழையினால் சேதமடைந்த புதுவை மாநில சாலைகள் சீரமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி சுமார் 130 கி.மீ நீளமுள்ள சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. தற்போது நகர பகுதியில் சாலைகள் மேம்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. தற்போது மேலும் ரூ.10 கோடியில் சாலை மேம்படுத்தும் பணியை தொடங்கியுள்ளோம். நகர சாலைகளை சிமெண்ட் சாலைகளாக மாற்றும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. முதலியார்பேட்டை புறவழிச்சாலை, சப்வே சாலைகள் அமைக்கும் பணி ரூ.5 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது.

நாராயணசாமி மீது தாக்கு

சாலைகள் மேம்பாட்டுக்கு அளிக்கப்பட்ட நிதி முழுமையாக செலவிடப்படும். எம்எல்ஏக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் உள்ளாட்சித் துறை மூலம் பணிகள் விரைவில் தொடங்கும். சொன்னதை செய்யும் அரசாக எங்கள் அரசு இருக்கும். சட்டசபையில் அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் எங்கள் அரசு விரைவில் நிறைவேற்றும். எந்த திட்டத்தை அறிவித்து செயல்படுத்தவில்லை? சட்டசபை மார்ச் 30-ம் தேதி நிறைவடைந்தது. கோப்புகள் சென்று அனுமதி பெற்று வர புதுவையில் எப்போதும் ஓரிரு மாதங்கள் ஆகும். இது முதலமைச்சராக இருந்த நாராயணசாமிக்கு தெரியும். புதுவையில் ஒரு நாளில் எதற்கும் அனுமதி கிடைத்துவிடாது. இது அவருக்கும் தெரியும். கடந்த ஆட்சியில் வெளிப்படைத்தன்மை என்ற பெயரில் நமக்கு என்ன அதிகாரம் உள்ளது? என வெளிப்படுத்தி நிர்வாகத்தையே சீர்குலைத்து விட்டார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள், அரசுக்கு என்ன அதிகாரம் உள்ளது? என்பது புதுவையில் உள்ள அனைவருக்கும் தெளிவாக தெரியும். அந்த அடிப்படையில் கோப்புகள் எப்போது போகும், வரும் என தெரியும். ஓரிரு மாதம் கழித்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறதா? இல்லையா? என்று பாருங்கள். ஜனாதிபதி வரும் ஜூன் 6-ம் தேதி புதுவைக்கு வர உள்ளார். அப்போது பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை தொடங்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கும். புதுவை அரசின் காலி பணியிடங்கள் அனைத்தையும் அரசு நிரப்பும். தற்போது ஸ்டெனோகிராபர் தேர்வு நடந்துள்ளது. காவலர் தேர்வு ஓரிருவாரத்தில் நடக்க உள்ளது. அதன்பின் மேல்நிலை, கீழ்நிலை எழுத்தர், உதவியாளர் பணியிடங்கள் ஜூலை மாதத்திற்குள் தேர்வு நடத்தி முடிக்கப்படும்” என்று அவர் கூறினார்.

விழாவில் அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏக்கள் நேரு, சம்பத், ரமேஷ், அரசு செயலர் மணிகண்டன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தி: பாபு ராஜேந்திரன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Ltcutc exams will be conducted on july says cm rangasamy