சனிக்கிழமை அன்று லக்னோவில் உள்ள லுலு மாலில் நுழைந்து ஹனுமான் சாலிசாவை ஓதத் தொடங்கிய இருவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
லக்னோவில் உள்ள லுலு ஷாப்பிங் மாலுக்குள் நுழைய முயன்றபோது சலசலப்பை ஏற்படுத்தியதற்காக குறைந்தபட்சம் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கையை உறுதிப்படுத்திய காவல்துறை துணை ஆணையர் (தெற்கு) கோபால் கிருஷ்ண சவுத்ரி, “இரண்டு பேர் லுலு மாலுக்குள் நுழைந்து, தரையில் அமர்ந்து மத பிரார்த்தனைகளைச் செய்யத் தொடங்கினர். மாலின் பாதுகாப்பு ஊழியர்களால் அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், அவர்கள் கைது செய்யப்பட்டனர். இருவரும் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில், வலதுசாரிக் குழுவைச் சேர்ந்தவர்கள் வணிக வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தி, கலவரத்தை உருவாக்க வேண்டாம் என எச்சரித்து விடுவித்தனர்.
இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 153ஏ (வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 295ஏ (வேண்டுமென்றே மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட செயல்களில் ஈடுபடுதல்) ஆகியவற்றின் கீழ், சமீபத்தில் மாலில் தொழுகை நடத்தியதாகக் கூறப்படும் அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை வந்துள்ளது.
ஷாப்பிங் மாலில் ஒரு குழுவினர் தொழுகை நடத்துவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதை அடுத்து இந்த சர்ச்சை வெடித்தது.
வணிக வளாகத்திற்குள் மக்கள் நமாஸ் செய்வதை ஒரு வலதுசாரி அமைப்பு எதிர்த்தது மற்றும் அங்கு ஹனுமான் சாலிசாவை ஓதுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி கோரியது. அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இந்த வீடியோவில் காணப்பட்டவர்கள் தங்கள் ஊழியர்கள் இல்லை என்று கூறி, மாலின் பிரதிநிதிகளின் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மால் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை மால் முழுவதும், ‘மாலில் மத பிரார்த்தனைகள் அனுமதிக்கப்படாது’ என்று நோட்டீஸ் ஒட்டி அறிவித்தனர்.
லக்னோவில் உள்ள லுலு மால் ஜூலை 10 ஆம் தேதி உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் திறந்து வைக்கப்பட்டது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோடீஸ்வரர் யூசுப் அலி எம் ஏ தலைமையிலான அபுதாபியை தளமாகக் கொண்ட லுலு குழுமத்தால் இந்த மால் திறக்கப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.