உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ பல்கலைக்கழகம் அடுத்த கல்வியாண்டு முதல், கர்ப்பிணிகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய சான்றிதழ் படிப்பு மற்றும் டிப்ளமோ பட்டயப் படிப்பை கற்பிக்க உள்ளதாக கூறியுள்ளது.
இந்த புதிய படிப்பு மாணவர்களுக்கு தாய்மை பற்றி கற்பிக்கும், இதில் ஒரு கர்ப்பிணிப் பெண் என்ன உடை அணிய வேண்டும், சாப்பிட வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி தன்னைப் பொருத்தமாக வைத்திருக்க வேண்டும், எந்த வகையான இசையைக் கேட்க வேண்டும் என்பது உள்ளிட்ட மாணவர்களுக்கு கற்பிக்கும்.
பல்கலைக்கழகம் குறிப்பிடுகையில், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இந்த பாடத்திட்டத்தைத் தேர்வு செய்து படிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
லக்னோ பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் துர்கேஷ் ஸ்ரீவஸ்தவா, கூறுகையில், “உத்தரப் பிரதேச மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் ஆனந்திபென் படேல், வருங்காலத்தில் தாய்மார்களாக உள்ள பெண்களுக்கு பல்கலைக்கழகம் நிர்வாகம் பயிற்சி அளிக்க வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.” என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
“இந்த திட்டத்திற்கு ஒரு வழிகாட்டுதல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் 16 மதிப்புகளைப் பற்றி அறிந்து கொள்வார்கள். இந்த திட்டம் முக்கியமாக குடும்பக் கட்டுப்பாடு மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் எடுக்க வேண்டிய ஊட்டச்சத்து மதிப்பு ஆகியவற்றை வலியுறுத்துகிறது. இந்த புதிய பாடத்திட்டத்தின் கீழ் பல்வேறு பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்யப்படும்” என்றார்.
இந்த நடவடிக்கையை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வரவேற்றுள்ளார். சஞ்சீவ் என்ற மாணவர் கூறுகையில், “இது நிச்சயமாக மிகவும் நன்றாக இருக்கிறது. நாங்கள் அதை வரவேற்கிறோம். இது ஒரு முக்கியமான பிரச்சினை. மாணவர்களுக்கு தாய்மை பற்றி பயிற்சி அளிக்கப்படுமானால், அது ஒரு தம்பதியினருக்கு ஆரோக்கியமான குழந்தையைப் பெற உதவும்… இது நம் நாட்டுக்கு ஆரோக்கியமான எதிர்காலம் என்று பொருள்” என்று கூறினார்.