/indian-express-tamil/media/media_files/2025/04/30/gHuAv4Cv2JYQ3Wq9OjKi.jpg)
இந்த வார தொடக்கத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது அஷ்ரப், 36, கொல்லப்பட்டார். (புகைப்படம்/Facebook@Jaiko Live Vengara)
கர்நாடகாவின் மங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த கிரிக்கெட் போட்டியின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாகக் கூறி அடித்துக் கொல்லப்பட்ட கேரள இளைஞருக்கு மனநல குறைபாடு இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வார தொடக்கத்தில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் அஷ்ரப், 36, கொல்லப்பட்டார். அவர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக அவரைத் தாக்க்கியவர்கள் கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். முச்சிக்கடன் குஞ்ஞீதுவின் மகனான அவர், பழைய பொருட்களை சேகரித்து வாழ்ந்து வந்தார்.
அவரது இளைய சகோதரர் அப்துல் ஜப்பார் கூறுகையில், “அவர் எந்த அமைப்பிலும் ஈடுபடவில்லை. ஒரு கும்பல் அவரை தாக்கியதாகவும், அவர் இறந்துபோகட்டும் என விடப்பட்டதாகவும் எங்களிடம் கூறப்பட்டது. அவர் இறந்த பிறகும், உடல் இரண்டு மணி நேரம் சம்பவ இடத்திலேயே கைவிடப்பட்டது. யாரும் அவரை கவனிக்கவில்லை. அவர் அடையாளம் காணப்படவில்லை என்றாலும், உள்ளூர் மக்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கலாம். உடலுக்குள் ஏற்பட்ட இரத்தப்போக்குதான் அவரது மரணத்திற்கு காரணம் என்று எங்களிடம் கூறப்பட்டது.” என்றார்.
பாதிக்கப்பட்டவரின் குடும்பம் கடந்த மூன்று ஆண்டுகளாக மலப்புரம் பரப்பூரில் உள்ள அவர்களது வீடு வங்கிக் கடனை கட்டாததால் வங்கியால் கையகப்படுத்தப்பட்ட பின்னர், வயநாடு மாவட்டம் புல்பள்ளியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறது. புதன்கிழமை அதிகாலை மங்களூருவில் அவரது உடலைப் பெற்றனர்.
அவர்களது குடும்ப நண்பரும், பஞ்சாயத்து தொகுதி உறுப்பினருமான நாசர் பரப்பூர் கூறுகையில், அஷ்ரப் வட கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பழைய பொருட்கள் சேகரிப்பவராக வேலை செய்து வந்தார். “ஈத் பண்டிகையின்போது, அவர் வயநாட்டில் உள்ள புல்பள்ளியில் தனது குடும்பத்துடன் இருந்தார். பின்னர், அவர் காசர்கோடுக்குச் சென்றார், வேலைக்காக மங்களூரு சென்றிருக்கலாம். அவர் மங்களூரு மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் பழைய பொருட்களை சேகரித்து வந்தார். செவ்வாய்க்கிழமை மாலை வெகுநேரமான பிறகுதான் குடும்பத்தினருக்கு அவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தெரியவந்தது” என்று நாசர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.