கொல்வதற்கு முன் செல்ஃபி: நாட்டையே உலுக்கிய பழங்குடி இளைஞரின் கொலை

சட்டை கிழிந்தபடியும் வெறுமையாக காட்சியளிக்கும் புகைப்படமும், அவரது கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் இரக்கமின்றி செல்பி எடுக்கும் புகைப்படமும் வைரலானது.

படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம், ஒடுக்கப்பட்டவர்களுக்காக ஓங்கி குரல் எழுப்பும் இடதுசாரி மக்களையும், எளிமையான தலைவர்களையும் கொண்ட திருநாடு கேரளம் என்றுதான் நாம் அறிந்திருப்போம். ஆனால், அம்மாநிலத்தில் குறும்பர் எனும் பழங்குடி இனத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு நேர்ந்த கொடுமை நமது பொதுபுத்தியை மாற்றிவிடும். கடையில் அரிசி திருடியதாக அந்த இளைஞர் மீது குற்றம்சாட்டி, ஊர் மக்கள் அடித்தே கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இளைஞரை அடித்தபின்பு, அவர் முகத்தில் ரத்தத்துடனும், சட்டை கிழிந்தபடியும் வெறுமையாக காட்சியளிக்கும் புகைப்படமும், அவரது கைகள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் இரக்கமின்றி செல்பி எடுக்கும் புகைப்படமும் இணையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை)வைரலானது.

இந்த சம்பவம் கேரளாவின் அட்டப்பாடியில் உள்ள முக்கலியில் இச்சம்பவம் நடைபெற்றது. தகவலறிந்து போலீசார் அங்கு சென்றபோது, ஹூசைன் முகமது, மனு தாமோதரன், அப்துல் ரகுமான், அப்துல் லத்தீஃப், அப்துல் கரீம், உமர், ஜோசஃப் உள்ளிட்டோர் அடங்கிய கும்பல், மது அரிசியை திருடியதால் அடித்ததாக கூறி, அரிசி மூட்டையுடன் போலீஸ் ஜீப்பில் ஏற்றியுள்ளனர். காவல் துறை தெரிவித்த தகவலின்படி, போலீஸ் ஜீப்பில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

தற்போதைக்கு ‘சந்தேக மரணம்’ என வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பிரேத பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் அதன்படி வழக்கை வேறு பிரிவுகளில் மாற்றுவோம் என தெரிவித்தனர்.

அந்த புகைப்படத்தில் செல்ஃபி எடுக்கும் உபைத் என்ற இளைஞர் உட்பட 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா, மாநில காவல் துறை தலைவர் லோக்நாத் பெஹேரா, நடிகர் மம்முட்டி ஆகியோர், இச்சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

“முற்போக்கான கேரள மாநிலத்தின் மீது விழுந்த கறை. இந்த கொலையில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இனிமேல், இம்மாதிரி ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் மீது தாக்குதல் நடைபெற கூடாது. முற்போக்கான, கனிவான, பரந்த நோக்கம் கொண்ட மாநிலமாக கேரளா திகழ வேண்டும்”, என பினராயி விஜயன் தெரிவித்தார்.

“கேரளாவில் சமீபகாலமாக கும்பல் வன்முறை அதிகரித்து வருகிறது. இது நாகரீக சமுதாயத்திற்கு எதிரானது”, என, டிஜிபி லோக்நாத் பெஹேரா தெரிவித்தார்.

இந்த கொலையை விசாரித்து வரும் ஐஜி அஜித் குமார் தெரிவிக்கையில், “சிசிடிவி பதிவுகளின்படி, உள்ளூர் கடையொன்றில் அரிசியை திருடியது மதுதான் என நினைத்து அவர் மீது கும்பல் தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளது. ஏற்கனவே, இத்தகைய திருட்டு சம்பவங்கள் குறித்து முக்கலியில் அதிக புகார்கள் வந்துள்ளன.

“மதுவை ஆதிவாசி என அழைக்காதீர்கள், அவரை நான் என் இளைய சகோதரர் என கூறுவேன். தன் பசியைப் போக்கிக்கொள்ள உணவை எடுப்பவர்களை திருடன் என கூறாதீர்கள், மது, என்னை மன்னித்துவிடு”, என மம்முட்டி தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

இச்சம்பவம் குறித்து கொலையான மதுவின் தாய் மல்லி தெரிவித்ததாவது, “என் மகன் 10 ஆண்டுகளுக்கு முன்பே தந்தையை இழந்தவன். இந்த காட்டில் நாங்கள் எட்டு ஆண்டுகளாக வாழ்கிறோம். அவன் திருடன் அல்ல. கிராமத்திற்கு சென்று சமைக்க தேவையான பொருட்களை வாங்கிவிட்டு காட்டுக்குள் வருவான். இங்கிருக்கும் எல்லோருக்கும் அவனை தெரியும். யாரையும் அவன் தாக்கியதில்லை. ஆனால், அவனை யாரும் வாழவிடவில்லை”, என வேதனையுடன் கூறினார்.

அட்டப்பாடியின் வனப்பகுதியில் உள்ள சிந்தகி காலணியில் வசித்துவரும் குறும்பர் இனத்தை சேர்ந்தவர் மல்லி. இந்த பகுதி மிகவும் வறுமையால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். இங்குள்ள பழங்குடி குழந்தைகள் அதிகளவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கும் நிலைமைதான் இன்றும் உள்ளது.

கேரளாவின் பல்வேறு பகுதிகளில், மதுவின் கொலையைக் கண்டித்து போராட்டம் நடைபெற்று வருகிறது. எஸ்.சி/எஸ்.டி ஆணையம் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுவின் சடலம் வைக்கப்பட்டிருந்த அகலி அரசு மருத்துவமனை முன்பு பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

×Close
×Close