மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், 133 உள்ளாட்சி அமைப்புகளுக்கான முடிவுகள் வெளியாகின. இதில் ஆளும் பாஜக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், முதல் கட்டமாக 11 மாநகராட்சிகள் உள்பட 133 உள்ளாட்சி அமைப்புகளுக்கான முடிவுகள் நேற்று (ஜூலை 17) அறிவிக்கப்பட்டன. இதில் ஆளும் பாஜக 108 உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றியுள்ளன. 11 மாநகராட்சிகளில் 7 இடங்களில் பாஜக, 3 இடங்களில் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஓர் இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி நான்கு வேட்பாளர்களை முன்னிறுத்தியது. நான்கு பேரும் வெற்றி பெற்றுள்ளனர். ஜபல்பூரில் இரண்டு பேர், புர்ஹான்பூர், கந்த்வாவில் தலா ஒருவர் போட்டியிட்டனர். இதேபோல், ஆம் ஆத்மி கட்சியின் 14 வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர், சிங்ராலி மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
குவாலியர், சிந்த்வாரா மற்றும் ஜபல்பூர் மாநகராட்சியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. இருப்பினும் சிந்த்வாராவில் மட்டும் தனது மேயரை நிறுத்தமுடியும், மற்ற மாநகராட்சிகளில் காங்கிரஸ் கவுன்சிலர்கள் பெரும்பான்மை குறைவாக உள்ளனர்.
தேர்தல் முடிவுகள் குறித்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாஜக முன்பு போல் இல்லாமல் 80 சதவீத இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 108 உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் முந்தைய உள்ளாட்சித் தேர்தலில் எந்த மாநகராட்சியையும் கைப்பற்றவில்லை. தற்போது 3 மாநகராட்சிளில் வெற்றி பெற்றுள்ளது" என்றார்.
மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கூறும்போது, "2009க்கு பிறகு 3 மாநகராட்சிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 2 இடங்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை இழந்துள்ளோம். இது பாஜகவின் அதிகாரம், பணம் மற்றும் காவல்துறை துஷ்பிரயோகத்திற்கு எதிராக மக்கள் பெற்ற வெற்றி" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், " இந்தூர், போபாலில் தோல்வியடைந்தாலும், காங்கிரஸ் கவுன்சிலர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. புர்ஹான்பூரில் பாஜக, ஏஐஎம்ஐஎம்க்கு எதிராக கடுமையான போட்டியைக் கொடுத்து, 300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம்" என்றார்.
உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்கு எண்ணிக்கை ஜூலை 20ஆம் தேதி நடைபெற உள்ளது.