மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில், ஒரு நபர் தனது காதலியைத் தாக்கியதாகக் கூறப்படும் வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வெளிவந்ததை அடுத்து அவரது வீடு இடிக்கப்பட்டது. ஓட்டுநராக பணிபுரிந்த குற்றவாளி உத்தரபிரதேசத்தில் உள்ள மிர்சாபூரில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்.பி) நவ்நீத் பாசின் தெரிவித்தார்.
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், புல்டோசர் மூலம் வீட்டை வீழ்த்தும் வீடியோவை ட்வீட் செய்து, “பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் யாரும் மத்தியப் பிரதேச மண்ணில் காப்பாற்றப்பட மாட்டார்கள்” என்று கூறினார்.
இதையும் படியுங்கள்: தரமற்ற சாலையால் கோபம்: தனது டூவீலருக்கு தானே தீ வைத்தவர் கைது
குற்றம் சாட்டப்பட்ட பங்கஜ் திரிபாதியின் ஓட்டுநர் உரிமத்தையும் அரசாங்கம் ரத்து செய்துள்ளதாக சிவராஜ் சிங் சவுகான் கூறினார். மாவட்டத்தின் மௌகஞ்ச் பகுதியில் உள்ள தேரா கிராமத்தில் அந்த வீடு இருந்தது.
இதற்கிடையில், கடமை தவறியமைக்காக காவல் நிலைய பொறுப்பதிகாரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலீஸாரின் கூற்றுப்படி, 24 வயதான பங்கஜ் திரிபாதி, தகராறில் தனது 19 வயது காதலியை அடித்ததாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோவில், குற்றம் சாட்டப்பட்டவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் கேட்பது போல் தெரிகிறது. அந்த நபர் முதலில் எரிச்சலடைவது போல் தெரிகிறது, பின்னர் அவள் முகத்தில் பலமுறை உதைக்கவும் அறையவும் செய்தான்.
இந்தச் சம்பவம் இந்த வார தொடக்கத்தில் புதன்கிழமை (டிசம்பர் 21) நடந்ததாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
போலீஸ் துணைப்பிரிவு அதிகாரி (SDOP) நவீன் துபே கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் சம்பவம் குறித்து தங்களுக்கு தெரிவிக்க காவல் நிலையத்திற்கு வந்ததாகவும், ஆனால் அவர் புகார் அளிக்க மறுத்துவிட்டார். இருப்பினும் குற்றம் சாட்டப்பட்டவர் ஐ.பி.சி.,யின் 151 (பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்) பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார், என்று கூறினார்.
தாக்குதலின் வீடியோ வெளியானதும், குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்) மற்றும் பிற தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வீடியோவை படம்பிடித்து பரப்பிய நபர் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார், மேலும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நவீன் துபே கூறினார்.
கூடுதல் தகவல்கள் : PTI
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil