ஜூலை 6, 2023 வியாழன் அன்று போபாலில் உள்ள முதல்வர் மாளிகையில், சித்தி பகுதி சிறுநீர் வழக்கில் பாதிக்கப்பட்ட தஷ்மத் ராவத்துக்கு மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சால்வை அணிவித்தார். (PTI புகைப்படம்)
மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர், குற்றவாளி தனது தவறை உணர்ந்துவிட்டதால், இந்தச் செயலில் ஈடுபட்ட குற்றவாளியை விடுவிக்குமாறு மாநில அரசை வலியுறுத்தியுள்ளார்.
Advertisment
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தஷ்மத் ராவத் மீது சிறுநீர் கழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட பிரவேஷ் சுக்லாவை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி செவ்வாய்க்கிழமை சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, குற்றவாளி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
ஐ.பி.சி மற்றும் எஸ்.சி/எஸ்.டி (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் தொடர்புடைய குற்றச்சாட்டுகளைத் தவிர, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரவேஷ் சுக்லாவுக்கு எதிராக கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்.எஸ்.ஏ) கீழும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சித்தி பகுதியில் பிரவேஷ் சுக்லாவுக்குச் சொந்தமான வீட்டின் சட்டவிரோத கட்டுமானப் பகுதியும் இடிக்கப்பட்டது.
Advertisment
Advertisements
“அரசாங்கத்திடம் எனது கோரிக்கை என்னவென்றால் (குற்றம் சாட்டப்பட்டவரால்) தவறு நடந்துவிட்டது... இப்போது பிரவேஷ் சுக்லாவை விடுவிக்க வேண்டும். கடந்த காலத்தில் என்ன நடந்திருந்தாலும், அவர் தனது தவறை உணர்ந்துள்ளார்,” என்று தஷ்மத் ராவத் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து கேட்டபோது கூறினார்.
குற்றம் சாட்டப்பட்டவரின் அவமானகரமான செயலையும் மீறி அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததைச் சுட்டிக்காட்டியபோது, பாதிக்கப்பட்ட தஷ்மத் ராவத், "ஆம், நான் ஒப்புக்கொள்கிறேன் ... அவர் எங்கள் கிராமத்தின் பண்டிட், அவரை விடுவிக்க நாங்கள் அரசாங்கத்திடம் கோருகிறோம்," என்று கூறினார். கிராமத்தில் சாலை அமைப்பதைத் தவிர, அரசாங்கத்திடம் கோருவதற்கு வேறு எதுவும் இல்லை என்றும் தஷ்மத் ராவத் கூறினார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசத்தில் சிறுநீர் கழித்த விவகாரம் அரசியல் சர்ச்சையைத் தூண்டியுள்ளது, குற்றம் சாட்டப்பட்டவர் உள்ளூர் பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) சட்டமன்ற உறுப்பினருடன் தொடர்புடையவர் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியது, அதேநேரம் கட்சிக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை என பா.ஜ.க மறுப்பு தெரிவித்துள்ளது.
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் வியாழக்கிழமை போபாலில் உள்ள முதல்வர் இல்லத்தில் பாதிக்கப்பட்டவரின் கால்களைக் கழுவினார், மேலும் அவமானகரமான சம்பவம் குறித்து அவரிடம் மன்னிப்பும் கேட்டார். ஆனால், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் இந்த நடவடிக்கை வெறும் நாடகம் என்று எதிர்க்கட்சியினர் கூறியுள்ளனர்.
மாநில அரசு பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்ததுடன், அவரது வீடு கட்டுவதற்கு கூடுதலாக ரூ.1.5 லட்சம் வழங்கியது.
வெள்ளிக்கிழமையன்று ஒரு பிராமண அமைப்பு பிரவேஷ் சுக்லாவின் வீட்டின் ஒரு பகுதியை இடித்ததை எதிர்த்தது, அவருடைய செயல் வருந்தத்தக்கது, ஆனால் அவரது நடத்தைக்காக அவரது குடும்ப உறுப்பினர்களை தண்டிக்க முடியாது என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil