Madras HC Chief Justice V K Tahilramani resignation : சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மும்பை நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த வி.கே. தஹில் ரமணி பதவி உயர்வுபெற்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்தியாவின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான இவர், தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் நீதிபதிகளில் ஒருவராவார். இவரை மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலிஜியம் கடந்த மாதம் பரிந்துரை செய்திருந்தது.மேகாலய மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஏ.கே.மிட்டல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து கொலிஜியம் உத்தரவு பிறப்பித்தது.
ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட சிறிய நீதிமன்றமான மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு தஹில் ரமணி இடமாற்றம் மூத்த நீதிபதிகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.மேலும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை பணியிட மாற்றம் செய்வது நியாயமற்றது என கடும் எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்ஜியத்தின் முடிவால் தஹில் ரமணி அதிருப்தியடைந்த நிலையில், அதை மறுபரிசீலனை செய்யுமாறு கொலிஜியத்திற்கு கடிதம் அனுப்பினார். ஆனால், அந்தக் கோரிக்கையை கொலிஜியம் ஏற்காத நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், குடியரசு தலைவருக்கும் தனது ராஜினாமா கடிதத்தை தஹில் ரமணி அனுப்பினார்.
இந்த கடிதத்தின் மீதான முடிவு தெரியும் வரை, சென்னை உயர்நீதிமன்றத்தில் பணிகளை மேற்கொள்ளமால் தஹில் ரமாணி இருந்துவந்தார். இந்நிலையில், தஹில் ரமாணியின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். கடந்த 15 நாட்களாக தலைமை நீதிபதி இல்லாமல் செயல்பட்டு வந்த சென்னை உயர்நீதிமன்றத்திற்கு, மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி இனி தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.