Mahalaxmi Express Train: மும்பையில் பெய்துவரும் கனமழையால் ரயில் தண்டவாளங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது. மழை வெள்ளத்தில் 700 பயணிகளுடன் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் சிக்கியுள்ளது. அதில் உள்ள பயணிகள் இந்திய விமானப்படை, தேசிய பேரிடர் மீட்பு படையினரின் உதவியால் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
mumbai, maharashtra, heavy rain, mahalaxmi express train
தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. இதனால் மகாராஷ்டிர மாநிலமே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. .சில நாட்கள் அங்கு மழை ஓய்ந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் மழை பெய்ய துவங்கியுள்ளது. நேற்று இரவு முழுவதும் அங்கு கொட்டி தீர்த்த மழையின் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமானம், ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரயில்கள் மாற்றுப்பாதைகளில் இயக்கப்பட்டு வருகின்றன.
ரயில் தண்டவாளங்களில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளதால், ரயில்கள் குறைந்தவேகத்திலேயே இயக்கப்படுகின்றன. இந்நிலையில், உல்ஹாஸ் ஆற்றின் மேலே 700 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில், பட்லாபூர் - வாங்கனி ஸ்டேசன்களுக்கு இடையே, வெள்ளநீரில் சிக்கிக்கொண்டது. தேசிய பேரிடர் மீட்புப்படையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வருகின்றனர்.
9 கர்ப்பிணிகள் உள்ளிட்ட 500 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 37 டாக்டர்கள், மகப்பேறு மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. மீட்கப்பட்டவர்கள் ஷாயாத்ரி மங்கள் காரியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு பிஸ்கட், குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பாதிப்பின் தீவிரம் குறித்து கண்காணிக்க தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். 7 கப்பற்படை, இந்திய விமானப்படைக்கு சொந்தமான 2 ஹெலிகாப்டர்கள் , ராணுவ வீரர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில் மோசமான வானிலை நிலவிவருவதன் காரணமாக, ஹெலிகாப்டர்கள் மீட்புப்பணியில் ஈடுபட முடியவில்லை என்று முதல்வர் அலுவலகம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.