மகாராஷ்டிரா தேர்தலில் கடந்த ஆறு மாதங்களாக விவசாயிகள், பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (ஓபிசி) இலக்காக கொண்டு பா.ஜ.க பணியாற்றியது. இந்த முயற்சி பா.ஜ.க, ஷிவ் சேனா மற்றும் தேசியவாத காங்கிரஸின் மகாயுதி கூட்டணிக்கு பலனளித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Game, set, match in Maharashtra: How BJP plotted its triumph after LS poll setback
இன்று (நவ 23) பிற்பகல் 12.25 மணி நிலவரப்படி 124 இடங்களில் பா.ஜ.க முன்னிலை பெற்றுள்ளது. இதில் சில தொகுதிகளில் வெற்றியும் கண்டது. இதன் மூலம் முதல்வர் பதவிக்கு பா.ஜ.க உரிமை கோரும் நிலையும் உருவாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் உடனான கருத்து வேறுபாட்டை கடந்து அதனை பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதும் பா.ஜ.கவின் இந்த வெற்றிக்கு பெரும்பங்காற்றியது. மேலும், "ஒன்றாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம், பிரிந்து சென்றால் வீழ்ந்து விடுவோம்" என்ற கோஷத்தை முன்வைத்து பா.ஜ.க தனது பிரச்சாரத்தை மேற்கொண்டது.
ஆர்.எஸ்.எஸ் உடன் இணைந்த 35 அமைப்புகளும் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தன. "வீட்டுக்கு வீடு பிரச்சாரத்திற்கு எங்கள் தொண்டர்களை ஈடுபடுத்தியதன் மூலம் நாங்கள் தேர்தலை தீவிரமாக எதிர் கொண்டோம்" என்று ஒரு மூத்த சங்பரிவார் தலைவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய நகர்வுகள்:
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பா.ஜ.க போர்க்கால அடிப்படையில் தவறுகளைக் கண்டறிந்து சரிசெய்யும் நடவடிக்கையில் இறங்கியது. சட்டப் பேரவைத் தேர்தலில் எந்தத் தவறும் நிகழாத வகையில் பணியாற்ற வேண்டுமென பா.ஜ.க தலைமை அறிவுறுத்தியது. மகாயுத்தி அரசு மஜி லட்கி பஹின் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியது.
இந்தத் திட்டத்தின் கீழ், 18 வயது முதல் 65 வயது வரையிலான பெண்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.1,500 வழங்கப்பட்டது. (மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.2,100 ஆக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது). இதற்கு தகுதியான பயனாளிகளின் எண்ணிக்கை 2.25 கோடி ஆகும். அறிமுகம் செய்யப்பட்ட நான்கு மாதங்களில், தகுதியான பெண் பயனாளிகள் தங்கள் வங்கிக் கணக்கில் ரூ.7,500 பெற்றுள்ளனர். இத்திட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
சாதிய ரீதியான சவால்களும் மகாயுதி கூட்டணிக்கு இருந்தது. மராத்தா இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜரங்கே பாட்டீலின் இடஒதுக்கீடு போராட்டம், மரத்தா மற்றும் ஓபிசி பிரிவினரிடையே பிரிவை உண்டாகியது. இந்நிலையில், மராட்டியர்களின் வாக்குகள் பா.ஜ.கவிற்கு எதிராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், பா.ஜ.கவின் இந்து ஒற்றுமை என்ற முழக்கம் ஓரளவிற்கு கைகொடுத்தது.
முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மராட்டியர்களிடையே பா.ஜ.க எதிர்ப்பை போக்கவும் பணியாற்றினார். 33 சதவீத மக்கள் தொகை கொண்ட அரசியல் ஆதிக்க சமூகம் ஒரு முக்கியமான காரணியாக இருந்தது. ஜரங்கே-பாட்டீலின் சீரற்ற அரசியல், தேவேந்திர ஃபட்னாவிஸுக்கு எதிராக இயக்கப்பட்டதால், போராட்டத்தின் தாக்கத்தை நீர்த்துப்போகச் செய்ததாகத் தெரிகிறது.
ஓபிசி பிரிவினரை ஒன்றிணைத்த பா.ஜ.க
மராட்டியர்களின் போராட்டம் ஓபிசி பிரிவினரை பிளவுபடுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், பிரிந்து கிடந்த 353 சமூக மக்களை ஒன்றிணைக்கும் ஒரு பெரிய திட்டத்தை பா.ஜ.க தீட்டியது. மகாராஷ்டிரா தேர்தலுக்குப் பொறுப்பான மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ், மாநிலத் தலைவர்களுடன் இணைந்து பா.ஜ.கவுடன் பிராந்திய வாரியாக ஓபிசி தொடர்பை உன்னிப்பாகத் திட்டமிட்டு செயல்படுத்தினார். மத்திய ஓபிசி பட்டியலில் ஏழு சாதிகள் அல்லது துணை ஜாதிகளை சேர்க்குமாறு ஓபிசி ஆணையத்திடம் முன்மொழியும் அளவிற்கு கட்சி சென்றது. ஓபிசி-களின் நுண்ணிய மேலாண்மை மகாயுதி கூட்டணிக்கு ஆதரவாக அமைந்தது. 38 சதவீத மக்கள் தொகையுடன், மாநிலத்தில் உள்ள 288 இடங்களில் 175 இடங்களில் தேர்தல் முடிவுகளை நிர்ணயிப்பதில் ஓபிசி-கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
லோக்சபா தேர்தலின் போது பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பு மற்றும் இடஒதுக்கூட்டிற்கு ஆபத்தாக அமையும் எனக் கூறு தலித் மக்கள் வாக்கினை பெற எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தனர். ஆனால், இதே பாணியிலான பிரச்சாரம் சட்டமன்ற தேர்தலில் கைகொடுக்கவில்லை.
விவசாயிகளின் பங்கு:
மகாராஷ்டிராவின் மக்கள் தொகையில் 65 சதவீதம் விவசாயத்தை நம்பியிருப்பதால், மாநில அரசியலில் கிராமப்புற பொருளாதாரத்தின் தாக்கம் புறக்கணிக்க முடியாத காரணியாக இருந்தது. இதனிடையே, விதர்பா மற்றும் மராத்வாடாவில், சோயாபீன் மற்றும் பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கு பெரிய பிரச்சினையாக இருந்தது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாடங்களைக் கற்றுக் கொண்ட மாநில அரசு, விவசாயிகளின் கோபத்தைக் கட்டுப்படுத்த பல சலுகைகளை அளித்தது. மாநில பட்ஜெட்டில், 7.5 ஹெச்பி வரையிலான பம்புகளை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. தேர்தல் அறிக்கையில், பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டது.
வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரி குறைக்கப்பட்டது. மேலும், வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை அரசு நீக்கியது. இதேபோல், கச்சா பாமாயில் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது. இது போன்ற முடிவுகள் கடந்த செப்டம்பர் மாதம் எடுக்கப்பட்டது. இவையும் பா.ஜ.க கூட்டணிக்கு சாதகமாக அமைந்தன.
செய்தி - ஷுபாங்கி காப்ரே
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.