மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் ஆா்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகம் உள்ளது. இங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ஆா்.எஸ்.எஸ் நிறுவனா் கே.பி. ஹெட்கேவாா், அதன் இரண்டாம் தலைவா் எம்.எஸ்.கோல்வல்கா் ஆகியோரின் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
இதன்பின்னர், அங்கு வைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் அஸ்திக்கு மரியாதை செலுத்தினார். மேலும் மாதவ் நேத்ராலயா கண் மருத்துவ நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புதிய விரிவாக்கக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி விழாவில் உரையாற்றினார். மோடி பிரதமராக பதவியேற்றதற்குப் பின்னர், அதாவது கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பின் அவர் முதல்முறையாக ஆர்.ஆர்.எஸ் தலைமை அலுவலகம் சென்றிருந்தார்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: ‘No need to search for Modi’s successor’: Maharashtra CM Fadnavis responds to Sanjay Raut’s ‘PM to retire’ claim
இந்நிலையில் பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்துக்கு நேற்று சென்றதாக சிவசேனா (யு.பி.டி) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த 11 ஆண்டுகளில் மோடி ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்குச் சென்றதில்லை. தற்போது தான் அவர் சென்றுள்ளார்.
அவருடைய ஓய்வு விண்ணப்பத்தை அளிக்க அவர் அங்கு சென்றிருக்கலாம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, இந்த நாட்டின் தலைவரை மாற்ற விரும்புவதாகவே நான் நினைக்கிறேன். பிரதமர் மோடியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். பா.ஜ.க-விற்கும் அடுத்த தலைவரை தேர்வு செய்ய விரும்புகிறார்கள். அதனால், மோடி 75 வயதில் ஓய்வு பெறுவார் என்பது தெளிவாகிறது
எனவே, அடுத்த பிரதமரை ஆர்.எஸ்.எஸ்-தான் தேர்வு செய்யும். அடுத்த பிரதமர் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவராக இருப்பார். இதுகுறித்து விவாதிக்காகவே ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்துக்கு வர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறியிருந்தார். இந்த ஆண்டு செப்டம்பரில் மோடிக்கு 75 வயது ஆகிறது என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.
பதிலடி
இந்த நிலையில், சஞ்சய் ராவத்தின் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், புதிய பிரதமரை தேட வேண்டிய அவசியமில்லை என்றும், 2029 ஆம் ஆண்டிலும் மோடி மீண்டும் பிரதமர் பதவியில் நீடிப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய பிரதமரை தேட வேண்டிய அவசியமில்லை. அவர் (மோடி) எங்கள் தலைவர், அவர் தொடர்ந்து பதவியில் இருப்பார். நமது கலாச்சாரத்தில், தந்தை உயிருடன் இருக்கும்போது, வாரிசுரிமை பற்றிப் பேசுவது பொருத்தமற்றது. அது முகலாய கலாச்சாரம். அதைப் பற்றி விவாதிக்க இப்போது நேரம் வரவில்லை." என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறியுள்ளார்.
இதற்கிடையில், நேற்று நாக்பூரில் இருந்த மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுரேஷ் 'பையாஜி' ஜோஷி, புதிய பிரதமர் குறித்த எந்தப் பேச்சும் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.